தாய்ப்பால் தானம்… தாய்மைக்கு சிறப்பு

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகச்சிறந்த ஊட்டசத்து என்பது யாவரும் அறிந்ததே. இன்றும் சில தாய்மார்கள் தன்னோட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு குறைந்து விடும் என்று  நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மூலமாக தாயும் சேயும் கூடுதல் அழகும், நலமுடன் வாழ முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற எண்ணிலடங்கா “தாய்மார்கள் தாய்ப்பால் தானமாக” வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

மார்ச்- 8 அன்று  “உலக மகளிர் தினத்தை” முன்னிட்டு தாய்ப்பாலின் அவசியத்தையும், புரிதலையும் தெரியப்படுத்துகிற தாய்மார்களில் மதுரை அழகர் கோயில் பகுதியைச் சேர்ந்த விஜயலெட்சுமி இங்குள்ள தாய்ப்பால் வங்கிக்கு 157 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்திருக்கிறார்கள்..!

இப்படி தாய்ப்பால் வழங்குவதில் “இந்தியா புக் ஆப் ரெக்கார்டு” பண்ணிய சாதனை தாய்மார்கள் முறையே 42L, 106L, 156L, இதற்கு முன் வழங்கி இருக்கிறார்கள். விஜயலெட்சுமி 157 லிட்டர் கொடுத்திருக்கிறார். ஆனால் சாதனை புத்தகத்திற்கு பதியவில்லை..!
இவரது சேவையை பாராட்டி “மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் உலக மகளிர் தினத்தில் விருது” வழங்கி கௌரவித்திருக்கிறது.

இனி விஜயலெட்சுமி கூறுவதை கேட்போம்..,

“எனது திருமணத்திற்கு பின்பு கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனது முதல் குழந்தையை நிறைமாதமாக கருவுற்றிருந்தேன். எனது கல்லூரி பேராசிரிய‌ர் உஷா மேம் தங்களுடைய குழந்தை பிறந்த போது தாய்பால் அதிகமாக சுரந்ததாகவும் அதை வீணாக்க மனமில்லாமல் குழந்தைகள் காப்பகத்தை தேடிச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் வழங்கிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு அதை கேட்கும் போதே பிரம்மிப்பாக இருந்தது. பின்பு குழந்தை பிறந்தவுடன் கல்லூரி படிப்பும் முடிந்துவிட்டது. நானும் குழந்தை வளர்ப்பில் மூழ்கிவிட்டேன்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டிலிருந்தே தாய்ப்பாலை தானாமாக வழங்க முடியும் என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.
2022ல் எனது இரண்டாவது குழந்தை ருத்ரா பிறந்தவுடன் வலைத்தலங்கள் மூலம் அமிர்தம் தாய்ப்பால் தானம் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அதன் நிறுவனர் ரூபா செல்வநாயகி மேம் உதவியுடன் தாய்ப்பால் தானாமாக வழங்க சம்மதித்தேன். இவர்களின் குழு மூலமாக மாதம் ஒரு முறை வந்து இருபது பாக்கெட் வாங்கி செல்கிறார்கள். அதற்கு முன்பே தாய்ப்பால் சேகரிக்கும் பைகள் இலவசமாக வழங்கி விடுகிறார்கள்.

“கடந்த இரண்டரை வருடத்தில் இக்குழுவின் வாலண்டியராக கெளதம் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோரின் மூலமாக 157 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கியிருக்கிறேன். இன்னும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அளவற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அமிர்தம் தாய்ப்பால் தானம் தொண்டு நிறுவனம், சேவை மனப்பான்மையுடன் தாய்ப்பால் தானாமாக தருபவர்களை சந்தித்து அவர்களுடைய தாய்ப்பாலை பெற்று அதை பாதுகாப்பாக மதுரை தாய்ப்பால் வங்கியில்  சேர்க்கிறார்கள். அங்கு சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க நினைக்கும் தார்மார்களுக்கு எனது வேண்டுகோள் தாய்ப்பால் அதன் தேவைக்கு ஏற்றாப்போல் சுரக்கிறது. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் தானம் செய்வது மூலம் குழந்தை ஆறு மாத வளர்ச்சி பெற்ற நிலையில் குழந்தைக்கு பால் சுரப்பு பற்றாக்குறை பிரச்சினையும் வராது. உடல் பருமன் பிரச்சினையும் வாராது. உடல் சீராக இருக்கும் நீங்கள் கொடுக்கும் தாய்ப்பால் எங்கோ ஒரு குழந்தையின் பசியைப் போக்குவது மட்டுமல்ல! அந்த குழந்தையின் உயிரையும் காப்பாற்றுகிறது” என்றார்.