தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை, தானே தொடர்ந்து விசாரிப்பதாகவும், இதற்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்தும், விடுதலை செய்தும் கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இதுபோல, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

ஏற்கெனவே முடிந்துபோன வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்ய உத்தரவிட்டி ருந்தனர்.

இந்த சூழலில், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தன. அப்போது அவர், ‘‘இந்த வழக்குகளை நானே (நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்) விசாரிக்க தலைமை நீதிபதி நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இந்த 4வழக்குகளும் பிப்ரவரி 27, 28, 29,மார்ச் 5 ஆகிய 4 நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார்.