மதம், மொழி, இன பேதமற்ற ஒன்றுபட்ட தேசியம் மற்றும் வறுமையை அகற்றும் தேசியப் பொருளாதாரம் என்னும் இரு உயர் லட்சியங்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பாரத சமூகத்துக்குச் சொன்னவர் தாதாபாய் நெளரோஜி. வறுமையை ஒழிப்பதே பாரத தேசியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். வல்லரசாக அல்ல, வறுமையற்ற தேசமாக பாரதம் உயர வேண்டும் என கனவு கண்டவர் நௌரோஜி.
ஆங்கில ஆட்சியில் பாரதத்தில் ஏற்பட்ட வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகளுக்கு காரணம் குறித்து ஆய்வு செய்தார். ஆங்கில அரசின் நிதி நிர்வாகத்துக்கும், பாரதத்தின் வறுமைக்கும் காரணமாக பாரதத்தில் ஆங்கில ஆட்சியில் நடந்தது ஆட்சி அல்ல, அது ஒரு பகல் கொள்ளை, பாரதத்தை பொருளாதார வேட்டை நிலமாக பிரிட்டன் மாற்றிவிட்டது. தொடர்ந்து நடந்த பொருளாதார வேட்டையின் காரணமாக நமது அரிய வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. ரத்த நாளங்களை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதுபோல நமது வளங்களை, பிரிட்டன் வடித்தெடுத்தது. இதனை‘வடித்தெடுக்கும் கொள்கை’(ட்ரெய்ன் தியரி) என்ற பிரிட்டிஷ் ஆட்சி குறித்த புரிதலை தாதாபாய் நௌரோஜி ஏற்படுத்தினார்.
1867ல் அவர் எழுதிய ‘வறுமையும், பாரதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியும்’ என்ற நூல் பாரதத்திலும் இங்கிலாந்திலும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. பொருளாதார விடுதலையை அரசியல் விடுதலைக்கு முன்னோடியாக எடுத்துச் சென்றார் தாதாபாய் நௌரோஜி. 1906ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் தேசிய இயக்கத்தின் ஒரே லட்சியம் என அறிவித்தார் நௌரோஜி.
சுதேசி இயக்கம், அந்நியப் பொருட்களை ஒழித்தல் என்ற இரு புரட்சித் திட்டங்களை தேசிய இயக்கத்தில் முன்வைத்தார். சுயராஜ்யம் அரசியல் விடுதலைக்கானது. சுதேசி அந்நியப் பொருட்களை விலக்குவது, பொருளாதார விடுதலைக்கானது. சுதேசி இல்லாது சுயராஜ்யம் இருக்க முடியாது என்பது அவரின் மிகத் தெளிவான அணுகுமுறை. சுதேசி இல்லாத சுயராஜ்யம் உயிர் இல்லாத உடல் போன்றது என்பது காந்தியின் கருத்து. சுயராஜ்ய, சுதேசி இயக்கங்கள் வெகு ஜனங்களை இந்திய தேசிய இயக்கத்துக்குள் கொண்டுவந்தன. எளிய மக்களின் கவனத்தை அது ஈர்த்தது. விடுதலை இயக்கம் நாடு முழுவதுமான பேரியக்கமாக உருவாவதற்கான அடித்தளத்தை அவர் அமைத்தார்.