தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்குச் சென்று அதன் உள்கட்டமைப்பு, தரம், மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தது. அதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு டெல்லி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவற்றில் ஒன்றாக, டெல்லியில் உள்ள 1,027 அரசுப் பள்ளிகளில் 203 பள்ளிகளில் மட்டுமே தலைமையாசிரியர் அல்லது முதல்வர் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து டெல்லி தலைமை செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டது. அதற்கு பதில் அளித்த டெல்லி அரசு, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது துணைநிலை ஆளுநரின் கீழ் வரும் சேவைகள் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, இது குறித்து தற்போதைய ஆளுநர் அனில் பைஜாலிடம் அல்லது மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும் என என்.சி.பி.சி.ஆருக்கு தெரிவித்துள்ளது.