ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, நாகராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
பரமக்குடியில், 1968 மே மாதம் 14ல், கிருஷ்ணமாச்சாரி – வசந்தா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், நாகராஜன் ஜி. அவருக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை கிருஷ்ணமாச்சாரி ஜியும் ஸ்வயம்சேவக். 1975ல், அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்சியை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் செய்ததால், நாகராஜன் ஜியின் தந்தை கிருஷ்ணமாச்சாரி ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் தீபாவளி வந்தது. அப்போது ப்ரச்சாரக்காக இருந்து, தலைமறைவாக வாழ்ந்த இல. கணேசன் ஜி, இவரது வீட்டில் தீபாவளியன்று தங்கி இருந்தார்.
இவ்வளவு எளிய வாழ்க்கை வாழ்கிறார்களே என அதிசயித்து போய், ஊக்கம் பெற்று சங்கத்திற்கு அறிமுகம் ஆனார். தனது இளம் வயது முதலே ஷாகா சென்றார். தந்தை நெசவுத் தொழில் செய்தார். மாற்று சிந்தனை கொண்டவர்கள், அவர்களின் தொழிலுக்கு நிறைய இன்னல்களை ஏற்படுத்தினர். மனம் தளராத அவரது தந்தை, நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டினார். அவரைப் போல, பல ஸ்வயம்சேவகர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக “நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலமாக பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட சங்க கார்யகர்தர்களுக்கு நிதி உதவி வழங்கினார். இதனை அருகில் இருந்து பார்த்து ஊக்கமடைந்த நாகராஜன் ஜியும், தன்னை சங்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.
தேனியில் ப்ராத்மிக் வர்கவை முடித்த பின்னர், 1985ம் ஆண்டு சங்கத்தின் முதலாம் ஆண்டு பயிற்சியை திருவேடகத்தில் முடித்தார். அதனைத் தொடர்ந்து, டாக்டர் ஜியின் நூற்றாண்டு வருடமான 1989ல், சங்க ப்ரச்சாரக் ஆனார். 1992 வரை தொடர்ந்து மூன்று வருடம், புதுக்கோட்டை ஜில்லாவில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் சங்கப் ப்ரச்சாரக்காக இருந்தார்.
1995ம் ஆண்டு பொள்ளாச்சியில் இரண்டாம் ஆண்டு முகாமும், 1997 ம் ஆண்டு நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும் முடித்தார். ப்ரச்சாரக்காக இருந்த மூன்று வருடத்தில் தினமும் கார்யகர்த்தர்கள் வீட்டிலேயே தங்குவார், அங்கேயே உணவு அருந்துவார். இதற்குக் காரணம் அப்போது சஹப் ப்ராந்த ப்ரச்சாரக்காக இருந்த இல. கணேசன் ஜி என தெரிவித்தார். நெசவாளர்கள் அதிகம் உள்ள அந்தப் பகுதியில் கிடைக்கும் இடத்தில் அவர் தங்கியிருந்து, கிடைத்த உணவை பருகி சங்க வேலை செய்தது, தனக்கு ஊக்கம் கொடுத்ததாகவும், அதனாலேயே சங்கப் ப்ரச்சாரக் ஆகி கார்யகர்த்தர் வீட்டிலேயே தங்கி, உணவு அருந்தி சங்க வேலை செய்ததாகவும் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர் ப்ரச்சாரக்காக இருந்த போது, மீனவர்கள் மத்தியில் சங்க வேலையை விரிவு படுத்தினார். கடலோர மாவட்டங்களில் மதமாற்றம் அதிக அளவில் காணப்பட்டது. தொடர்ந்து அங்கு சங்க வேலை செய்ததால், மதமாற்றம் தடுக்கப்பட்டதோடு, மீனவ சமுதாயத்தினரும் சங்கப் பணியில் அதிக அளவில் ஈடுபாடு காட்டினர். சங்கஸ்தானில் த்வஜம் ஏற்றுவதற்கு, மற்ற மதத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, அதை துணிவுடன் எதிர் கொண்டு, தினமும் ஷாகா நடத்தினார்.
1998ல், இந்துமதி அம்மையாரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பிரித்விராஜ் என்று மகனும், புவனேஷ் என்ற மகளும் உள்ளனர். 1998 முதல் ராமநாதபுரம் ஜில்லா ஷாரீரிக் ப்ரமுக் என தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இருந்தார். பின்னர் 2003 முதல் 2008 வரை ராமநாதபுரம் ஜில்லா காரியவாஹ்காக இருந்தார். அதனைத் தொடர்ந்து, 2008 முதல் 2023ம் ஆண்டு வரை ராமநாதபுரம் விபாஹ் கார்யவாஹ் (கோட்டச் செயலாளர்) பொறுப்பில் இருந்து, சங்க வேலை செய்தார். 2023 முதல் விபாஹ் கார்யகாரணி சதஸ்ய (செயற்குழு உறுப்பினர்) பொறுப்பில் உள்ளார்.
சங்கத்தின் மூத்த அதிகாரிகளான சூரி ஜி, சண்முகநாதன் ஜி, இல. கணேசன் ஜி, ஸ்தாணுமாலயன் ஜி, வன்னியராஜன் ஜி போன்ற பல மூத்த அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்து உள்ளனர்.
2004ல் ராமேஸ்வரத்தில் ப்ராத்மிக் நடைபெறுவதாக இருந்தது. அந்த நேரத்தில் சுனாமி வந்த காரணத்தால், கார்யகர்த்தர்கள் துரிதமாக செயல்பட்டு, நாகராஜன் ஜியின் வழிகாட்டுதலுடன் உடனடியாக பரமக்குடிக்கு வர்கவை மாற்றினார்கள்.
2012ல், நாகர்கோவிலில் நடந்த ப்ராந்த சாங்கிக்கில், இரண்டு மாதமாக விஸ்தாரக்காக இருந்து, பலரையும் தொடர்பு கொண்டு, ஜில்லாவில் இருந்து 752 பேருடன், பரமபூஜனீய சர்சங்கசாலக் மோகன் ஜி பாகவத் வந்து இருந்த அந்த சாங்கிக்கில் கலந்து கொண்டார்.
2019ல், ராமேஸ்வரத்தில் முதல் முறையாக முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம் நடந்தது. பலரின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஷாகா மூலமாக பொருட்கள் சேகரித்து, கார்யகர்த்தர்கள் சிறப்பாக நடத்திக் காட்டினார்கள்.
காலம் சென்ற ஜில்லா வியவஸ்தா ப்ரமுக்காக இருந்த கங்காதரன் ஜியுடன் இணைந்து பல சங்க வேலைகளை செய்து உள்ளார். எல்லா சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து, மாற்று சிந்தனை உள்ளவர்களையும் சங்கப் பணியில் ஈடுபடுத்த, “மகரிஷி அரவிந்தர் நற்பணி மன்றம்” என்ற அமைப்பை ஆரம்பித்து, அதன் மூலமாக பல தொண்டு காரியங்களையும், ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டனர்.
தனது விபாஹில் உள்ள அனைத்து கார்யகர்த்தர்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களுடைய குடும்ப சூழ்நிலைகள் அறிந்து, ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதை களைந்து, அவர்களை திரும்பவும் சங்கப் பணியில் ஈடுபடுத்த பெரும் முயற்சி மேற்கொள்வதை, தனது வாடிக்கையாக வைத்து உள்ள நாகராஜன் ஜி, அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்.