ராஷ்ட்ர சேவிகா சமிதி அமைப்பு துவங்கி 80 ஆண்டுகள் ஆகின்றது. அதையொட்டி நவம்பர் 11, 12, 13 தேதிகளில் தலைநகர் டெல்லியில் ‘பிரேரணா ஷிபிர்’ (உத்வேகம் தரும் முகாம்) நடந்தது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 3,000க்கும் மேற்பட்ட கார்யகர்த்தர்கள் கலந்து கொண்டனர். ஒரு சிறிய பாரதத்தையே அங்கு காணமுடிந்தது. தமிழகத்தில் இருந்து சென்ற 42 பேர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்கசாலக் மோகன் பாகவத் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பாரத நாட்டில் உள்ளது போன்ற குடும்ப அமைப்பு உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்தக் குடும்ப அமைப்பின் மூலம் உலகிற்கே இந்த நாடு வழிகாட்டியாக இருக்கின்றது. குடும்பத்திற்கும் அதன் பண்புகளுக்கும் நல்ல சக்தி இருக்கிறது. பெண்கள் சக்தியில்லாமல் சர்வ வல்லமை பொருந்திய நாடாக இருக்க முடியாது. உலகையும் அந்த நிலைமைக்கு கொண்டு வரமுடியாது. நமது அமைப்பு பரந்து விரிந்துள்ளது. பெண்கள் ஒத்துழைப்பினால் தான் சங்கமும் வளர்ந்துள்ளது” – இது மோகன் பாகவத் வெளியிட்ட கருத்து.
பிறகு ஜெயின் சம்பிரதாயத்தைச் சேர்ந்த துறவி பேசினார்.
சமிதியின் பிரமுக் சஞ்சாலிகா சாந்தா அக்கா, மானனீய பிரமிளாதாயி மேடே, அன்னதானம் சீதா அக்கா, ஷரத் ரேணு, அல்கா இனாம்தார், சுசீலாதாயி போன்றவர்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் முழு நேரமாகப் பணிபுரியும் சேவிகைகள், கார்யகர்த்தர்கள் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மகிளா சமன்வய அமைப்பின் தலைவர் மானனீய கீதா ஹுண்டே, விவேகானந்த கேந்திரத்தின் நிவேதிதா பிடே போன்ற மூத்த பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.
லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அவரது தலைமையில் கலந்துரையாடல் நடந்தது. அதில் கலாசாரத்தை பாதுகாப்பது, சமுதாயத்தில் சமத்துவம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சாதனை படைத்த சிறுமிகள், பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கரிஷ்மா ஜெயின் – ஆயுர்வேத மருத்துவர் – நற்பண்புள்ளவர்களாக குழந்தைகளை உருவாக்குதல் பற்றி பேசினார்.
தினமும் சமிதியின் முக்கிய நிகழ்ச்சியான ஷாகா நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி கலந்து கொண்டார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கிய வீராங்கனை தீபா மாலிக் கௌரவிக்கப்பட்டார்.
சூர்ய நமஸ்காரம், யோகா, வியாயாம் போன்ற பயிற்சிகளை 1,200 க்கும் மேற்பட்ட சேவிகைகள் செய்து காட்டினர்.
சாந்தா அக்கா: குடும்பம் சரியாக இருந்தால் தான் எல்லாம் நன்றாக இருக்கும். தலித் பிரச்சினை உள்ளிட்ட முக்கியமான மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு நமது அமைப்பில் தான் கிடைக்கின்றது. பெண்களுக்கு நல்ல கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். அடிப்படைக்கல்வி மிகவும் முக்கியம். நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் தங்களது பாரம்பரிய பண்பாடு, மதிப்பீடுகளை இழக்கக்கூடாது. பெண் தானும் நல்ல முறையில் உருவாகி, பிறகு தன் குடும்பம், சமுதாயம், நாடு ஆகியவற்றை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறாள். நாட்டின் எதிர்காலம் அவளிடம் தான் உள்ளது.