டில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ.க, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48ல் வென்றுள்ள பாஜக, கடந்த 26 ஆண்டுகாலமாக இழந்திருந்த ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது(45.7 % வாக்கு விகிதம்). இருமுறை மாபெரும் வெற்றியுடன் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது (43.5 % வாக்கு விகிதம்). முக்கிய கட்சியான காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. அதுமட்டுமல்ல, அதன் வாக்கு சதவீதம் 6.4% ஆகக் குறைந்து விட்டது.
நாடு முழுவதிலும் 16 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், மத்தியில் தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருந்தாலும், தலைநகர் டில்லியில் ஆட்சி அமைப்பது பாஜகவின் நிறைவேறாத கனவாக இருந்து வந்தது. அந்த ஏக்கம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
பாஜகவின் முந்தைய வடிவான ஜனசங்கம் காலத்தில் இருந்தே டில்லி அதன் கோட்டையாக இருந்தது. டில்லி மெட்ரோபாலிட்டன் கவுன்சில், மாநகராட்சி, சட்டசபைகளில் ஜனசங்கம் அதன் தற்போதைய வடிவான பாஜகவும் பெருவெற்றி பெற்றதுண்டு. டில்லி மாநிலத்தின் 7 லோக்சபா தொகுதிகளையும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்வது பாஜகவின் செல்வாக்கிற்கு அடையாளம். ஆனால், டில்லி சட்டசபை பாஜகவின் கண்களில் முள்ளாய் உடுத்திக் கொண்டிருந்தது.
காங்கிரஸ், பாஜக என்ற இரு கட்சி அரசியல் நிலை 2012ல் மாறாமல் இருந்திருந்தால், பாஜக அப்போதே மாநில ஆட்சியைப் பிடித்திருக்கும். ஆனால் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி உருவானதும், டில்லி அரசியலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டதும் அரசியல் அரங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, பாஜகவுக்கு ஏமாற்றம் அளித்தன.
அதுவரையில் நடுத்தர மக்கள், வணிகப் பெருமக்களின் ஆதரவு பாஜகவுக்கு மட்டுமே இருந்துவந்தது. தவிர, பிரிவினைக் துயரத்தின் கொடுமையை அனுபவித்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பாஜக விளங்கி வந்தது. ஆனால், தலைமுறை மாற்றம் காரணமாகவும், அரவிந்த் கேஜ்ரிவாலின் வசீகர தலைமை காரணமாகவும் இளம் வாக்காளர்களின் புதிய தேர்வாக ஆம் ஆத்மி கட்சி மாறியது.
காங்கிரஸ் இழந்து வந்த மக்கள் ஆதரவைக் கண்டு, அதன் அடிப்படை வாக்கு வங்கியான முஸ்லிம்களும் ஆம் ஆத்மியை ஆதரித்தனர். அதற்கு ஏற்ற வகையில் செக்யூலர் வேடம் தரித்தார் கேஜரிவால்.
டில்லி சட்டசபை தொகுதிகளின் முடிவைத் தீர்மானிப்பதில் முஸ்லிம் மக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். உயர் தர, நடுத்தர வகுப்பு மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு பெரும்பாலும் வருவதில்லை. அவர்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்தாலும், அவர்கள் வாக்குச்சாவடி வராததால், சிறுபான்மை மக்களின் திரண்ட வாக்குகள் தேர்தல் முடிவில் எதிரொலித்து வந்தன. அந்நிலை இத்தேர்தலில் மாறி இருக்கிறது.
தலைநகர் டில்லியில் தான் தோற்றாலும் பரவாயில்லை, பாஜக வென்று விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால், அதன் ஆதரவுத் தளத்தை தற்போது முற்றிலும் இழந்து நிற்கிறது.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பல அதிரடி மாற்றங்களை ஆம் ஆத்மி கட்சி அரசு நிகழ்த்தி இருப்பது உண்மை. கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் கேஜரிவால் அரசு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. ஏழைகளுக்கு இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சி அரசியலும் உண்டு. ஆனால், ஊழலுக்கு எதிரானவர் என்ற முத்திரையுடன் அரசியல் கட்சி தொடங்கிய அரவிந்த் கேஜரிவாலும் ஊழலுக்கு விலக்கில்லை என்ற நிலை மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது.
குறிப்பாக, மதுபானக் கொள்கை விவகாரத்தில் கேஜரிவால் அரசு நடத்திய விஞ்ஞான பூர்வமான ஊழல் அவரது பொதுவாழ்வில் பெரும் கறையாக அமைந்தது. அவரது அமைச்சரவை சகாக்கள் சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங், மணிஷ் சிசோடியா ஆகியோர் ஊழல் வழக்குகளில் கைதான போது, அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் தொடரச் செய்து, தானும் சாதாரண ஊழல் பேர்வழி தான் என்பதை கேஜரிவால் வெளிப்படுத்தினார். மத்திய பாஜக அரசு நடத்திய ஊழலுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளை பழிவாங்கும் போக்கு என்று விமர்சித்தார் அவர். அதன் மூலமாக அவரது புனித வேடம் கலைந்தது.
மத்திய புலனாய்வுத் துறையும் அமலாக்கத் துறையும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலை வெளிப்படுத்தத் தொடங்கியவுடன், காலிஸ்தான் சீக்கிய தீவிரவாதிகள், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன் தனது உறவை வலுப்படுத்தினார் கேஜரிவால். தவிர, அரசுக்கு எதிரான அராஜகவாதிகளின் ஆபத்பாந்தவனாகவும் அவர் மாறினார். அதன் மூலம் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
அதே திட்டத்துடன் தலைநகர் டில்லியில் மூன்றாம் முறை வென்று விடலாம் என்று அவர் மனப்பால் குடித்து வந்தார். மத்தியில் ஊழலற்ற, திறன்மிகு மோடி அரசு இல்லாதிருந்தால் அவரது கனவு நிறைவேறி இருக்கக் கூடும். டில்லியில் லோக்சபா தொகுதிகளுக்கு பாஜகவைத் தேர்வு செய்யும் மக்கள், சட்டசபை தேர்தலில் மட்டும் தன்னைத் தேர்வு செய்தது ஏன் என்று அரவிந்த் கேஜரிவால் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் மக்கள் ஆதரவை தவறாகப் புரிந்து கொண்டு ஆணவத்துடன் பாஜகவை எதிர்கொண்டார். அதுவே பாஜக எதிர்ப்பு வாக்குகளை தமக்கு ஆதரவாகக் குவிக்கும் என்று ஸ்டாலின் போல அவரும் நம்பினார். அதனால் தான் படுதோல்வி அடைந்திருக்கிறார்.
குறிப்பாக, முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா மூன்றாம் முறையாக வென்றதுடன், கேஜரிவாலை 4,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்
ஆம் ஆத்மி கட்சியின் நிழலில் நடந்துவந்த சி.ஐ.ஏ எதிர்ப்பு போன்ற தேசவிரோதப் போராட்டங்கள் இனி கலகலக்கும். ஊழல் அற்ற அரசு அமைவது தலைநகர் மக்களுக்கு நலமளிக்கும்.
பாஜகவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய உட்கட்சிப் பூசல் அதன் இடைக்காலச் சரிவுக்கு வித்திட்டது என்பதை அக்கட்சி மறந்துவிடக் கூடாது. மக்கள் செல்வாக்கு மிகுந்த இளம் தலைவர்களின் தேவையை பாஜக பூர்த்தி செய்வதும் அவசியம்.
மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி அமைவது டில்லி பெரும் வளர்ச்சி காண உதவும். தலைநகர் வழிகாட்டி விட்டது. தமிழகம் இதைப் புரிந்து கொண்டால் நல்லது.