நாள் தவறாமல் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறேன் என்று என் கணவர் சொன்னதும் எ…ன்…ன…து?” என்று அலறிவிட்டேன். மணப்பெண்தானே அம்மி மிதிப்பாள், அருந்ததி பார்ப்பாள்? இந்த நடுத்தர வயது ஆண்பிள்ளை அப்படி செய்கிறார் என்றால்…? என் கற்பனை தறிகெட்டு ஓடத் தொடங்கியது.
கற்பனைக்கு கடிவாளம் போட்டார் கணவர். அலுவலகத்திலிருந்து வரும்போது பாதையில் ஒரு அம்மி கிடக்கும். அதை மிதித்துதான் பாதையைக் கடக்கவேண்டும். பாதை எதிரே அருந்ததி மெடிக்கல்ஸ் கடை இருக்கும். அதனால் தினமும் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறேன், ஞாயிறு மட்டும் விடுமுறை என்று அவர் விளக்கியதும்தான் எனக்கு மூச்சே வந்தது.நாம் எல்லோருமே சேர்ந்துஅம்மியைத்தான் மிதித்து அமுக்கிவிட்டோமே? போன தலைமுறை அம்மாமார்கள் அரைக்காத அம்மியா? போன தலைமுறையென்றால் 40 ஆண்டுகளுக்கு முன்புதான். மிக்ஸி வந்து அம்மிக்கு கல்தா கொடுத்த பிறகு திருமண மண்டப மேடையில் ஒரு ஓரமாக ஒதுங்கி அம்மி சன்னியாசம் வாங்கிக்கொண்டுவிட்டது.
அம்மிக்கல்லை நினைத்தால் ஆட்டுக்கல் ஞாபகம் வரத்தானே செய்கிறது? ஆட்டுரல் என்றால் அனைவருக்கும் புரியும். கிரைண்டரில் அரிசி, அப்புறம் உளுந்து போட்டோமா, ஸ்விட்சை தட்டினோமா, டிவி முன்னால் போய் உட்கார்ந்தோமா என்பதெல்லாம் ஆட்டுரல் யுகத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாதவை. இட்லி தோசை வேண்டுமென்றால் மணிக்கணக்கில் ஆட்டுரலுடன் மல்லுக்கு நிற்கவேண்டும். சொல்வார்களல்லவா, உரலில் தலை கொடுத்தால் உலக்கைக்கு பயப்படலாமா என்று.
வெற்றிலைபாக்கு வைக்காமலே உலக்கை சகிதம் உரல் நம் முன் வந்து நிற்கிறது பாருங்கள். என்னதான் கண்ணனுடன் சம்பந்தப்பட்டது என்றாலும் உரல் போன தலைமுறைக்கும் முந்தின தலைமுறையிலேயே பணி ஓய்வு பெற்று தோட்டத்து மரத்தடிக்குப் போய்விட்டது. இப்போதெல்லாம் மரங்கள் உலக்கையைப் பார்த்து பயப்படுவதில்லை. அதற்கு ஒரு கண்ணன் வரவேண்டும். அவன் உலக்கையில் கட்டப்பட்டிருக்கவேண்டுமே?
நான் ஏதோ பொடிவைத்துப் பேசுவது போல இருக்கிறதா? நிச்சயம் இல்லை. அது இருக்கட்டும். இப்போதெல்லாம் மூலிகைப் பொடி தொடங்கி பருப்புப்பொடி வரை டஜன் கணக்கில் பொடிகள் சாஷேக்களில் கடைகளில் குவிந்து கிடக்கின்றன. சொல்லவந்த விஷயம், முன்பெல்லாம் பருப்புப்பொடி வேண்டுமென்றால் அரிசியையும் பருப்பையும் வறுத்து, திருவையில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, திருவையின் பிடியைப் பிடித்து, மணிக்கணக்கில் கிடைமட்டமாக வட்டமடிக்கவேண்டும். இடுப்புக்கு மேல் உடம்பே முன்னும் பின்னும் தானாக ஊஞ்சலாடும்! ஜிம்மில் செய்வதுபோல.
அடேடே, மறந்தே போனேன். அம்மி, ஆட்டுரல், திருவை, உரல் பற்றிய மலரும் நினைவுகளுக்கு மங்களம் பாடிவிட்டு, ஜம்மென்று ஜிம்முக்கு புறப்படுகிறேன்…. வரட்டா?