தமிழக விவசாயி வயலிலிருந்து நடுத்தெருவுக்கு

தமிழகத்தில் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழை நிற்பதாகத் தெரியவில்லை. சேதமான நெற்பயிர் போக மீதி அறுவடை தாமதமாகிறது. அறுவடை ஆனாலும் நெல்லின் ஈரப்பதம், கோல்மால்கள் எல்லாமாக சாமானிய விவசாயியின் வாழ்வாதாரத்தை பதம் பார்ப்பதாக செய்தி. இது பற்றி  தேசிய உள்ளம் கொண்ட விவசாயிகளின் அகில பாரத அமைப்பான ‘பாரதிய கிஸான் சங்க’த்தின் தமிழக செயலாளர் வீரசேகரனுடன் பேசினோம்.:

விஜயபாரதம்: நீங்கள் டெல்டாகாரர்; சொல்லுங்கள் வீரசேகரன், தை மாதம் பிறந்துவிட்டது. இப்போது அங்கே அறுவடை நடந்திருக்க வேண்டுமே? அடுத்து அரசின் கொள்முதல் மையத்தில் நெல் விற்று விவசாயி குடும்பத்துடன் கொண்டாடுவாரே?

வீரசேகரன்: போன வார கன மழையால் அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர் சேதமாகி விவசாயி திண்டாடுகிறார்; ஏது கொண்டாட்டம்?

விஜயபாரதம்: மத்திய குழு வருகிறதே?

வீரசேகரன்: அது ஒரு சடங்காகி விட்டது. பாருங்கள், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நெல் அறுவடைக்கு தயாராக  இருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பெருமளவு நெற்பயிர் சேதம். அறுவடையான  நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயிக்க மத்திய குழு வருகிறது.

விஜயபாரதம்: அறுவடை தோறும் நடப்பதுதானே?

வீரசேகரன்: வரும் நாட்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் அதிக ஈரப்பதம் இருக்கும். 17க்கு பதிலாக 21 சதவீதம் என கொள்கை அளவில் ஈரப்பத அளவை மத்திய அரசு நிரந்தரமாக்கி விட வேண்டும். அது வரை இப்படித்தான் நடக்கும்.

விஜயபாரதம்: மாநில அரசு மத்திய அரசை இது விஷயத்தில் அணுகியதா?

வீரசேகரன் : இங்கே நடப்பது அன்றாடங்காய்ச்சி பிழைப்பாக்க இருக்கிறது. அந்தந்த அறுவடையின் போது ஈரப்பத சதவீதத்தை உயர்த்துமாறு கோரி மாநில அரசு கடிதம் எழுதிவிட்டு விவசாயியை நட்டாற்றில் விட்டு விடுவது வாடிக்கை.

விஜயபாரதம்: வயலுக்கே வந்த நடமாடும் நெல் கொள்முதல் மையங்களால் நெல், மூட்டைக்கு 100 ரூபாய் வரை செலவு குறைந்தது என்கிறார்களே, இப்போது அதுபோல  ஏன் நடப்பதில்லை?

வீரசேகரன் : அதெல்லாம் வி.ஐ,பி வயலுக்குத்தான் கிடைத்தது. அதுவும் தவிர ஊழல் செய்ய முடியாதே (டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது போல்) இங்கு கிலோவுக்கு 1 ரூபாய்!

விஜயபாரதம்: உங்கள் பாரதிய கிஸான் சங்கம் இது விஷயமாக என்ன யோசனையை முன்வைக்கிறது?

வீரசேகரன்: முன்பே சொன்னது போல, நடப்பு 17 சதவீதத்திற்கு பதில் 21 சதவீதம் என கொள்கை அளவில் நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு நிரந்தரமாக்கி அறிவிக்க வேண்டும்.

விஜயபாரதம் : நன்றி.

வீரசேகரன் : வணக்கம்.    