தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைத்து போற்றும், காசி தமிழ் சங்கமம் நடைபெற இருக்கிறது. தமிழ்மொழியின் மாண்புகளை, பாரம்பரிய பெருமைகளை, கலாச்சார அருமைகளை, விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நவ.16 முதல்டிச.16 வரை நடைபெறுகிறது. வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு, ஓர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. பாரதியாரின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு உயிரூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி போன்ற 12 துறைகளை சேர்ந்த தமிழர்கள், துறைக்கு 200 பேர் என்ற வகையில், சுமார் 2,400 பேர் காசிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து செல்லப்படுவார்கள். காசி தமிழ் சங்கமம், தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளை நாடறிய செய்யும். இந்த நல்ல முயற்சியை தமிழக பா.ஜ.க சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்” என கூறியுள்ளார்.