தமிழக இளைஞர்களை சீரழிக்கும் போதை கலாச்சாரம்!

போதையின் பாதையில் தமிழகம் தள்ளாடுகிறது எனும் செய்தி நாள்தோறும் நாளிதழ்களில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.

இங்கு கஞ்சா சாக்லேட்டுகள், அபின், ஹெராயின், கொகைன், பிரவுன் சுகர் போன்றவை ஏழை முதல் பணக்காரன் வரைக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது. இதனால் சமூகத்தில் கொலை, கொள்ளை, வன்புணர்வு, வன்முறை வெறியாட்டம் போன்ற அவலங்கள் அன்றாடம் அறங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதனின் உடல் நலனையும், மனநலனையும் கெடுப்பதில் போதைப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பத்தையும் மற்றும் சமுதாயத்தையும் தவறான பாதையில் இழுத்து சென்று விடுகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதில் 3ல் ஒரு பங்கு பெண்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் மது குடிக்கும் வீடியோ ஒன்று வெளிவந்தது. நமது இளைய தலைமுறையினர் மதுவினால் எவ்வளவு சீரழிந்து உள்ளனர் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையா?

உலக வர்த்தகத்தில் போதைப்பொருள் கடத்தல் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. நமது தமிழகத்தில் கூட ஜாபர்சாதிக் எனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனை கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தது நாடறிந்த செய்தி. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயத்தை குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த அவலத்திற்கு தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம். இது முதல் முறையல்ல, இந்த ஆட்சியில் இதற்கு முன்பு 2023ல் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூரில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தமிழக அரசு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை `போதைப் இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினாலும் அது மக்களை சென்றடைந்ததா என்பது கேள்விக்குறி? ஆகவே பொதுமக்களின் நலன் கருதி போதைப் பொருட்கள் அனைத்தையும் முற்றிலும் ஒழிக்க அரசு முன்வர வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருள் கடத்துவோர், விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கும் அளவிற்கு சட்டம் இயற்றி அதனை அமல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு குழுக்கள் அமைத்து மதுவால் ஏற்படும் தீமைகளை, மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் விளக்கி கூற வேண்டும்.

ஊடகங்களும், சமூக அமைப்புகளும் போதையினால் ஏற்படும் பாதிப்புகளை பணக்காரன் முதல் எளிய பாமரன் வரையிலும் புரியவைக்க எளிய நடையில் எடுத்து சொல்ல வேண்டும். மதுவினால் சீரழிந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.