துரித கதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி, ஜனவரி 26 வரை எப்படியாவது போராட்டத்தை நீடித்து தேசத்துக்கு எதிராக மாணவர்களையும் கட்சி சார்பற்ற இளைஞர்களையும் திருப்பி விட வேண்டும் என்ற சமூக விரோதிகளின் சதியை ஆர்ப்பாட்டம் இன்றி முறியடித்துள்ளார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு இதற்கு முக்கியக் காரணம் என்பதை அவரும் ஜல்லிக்கட்டுக்காக 2006 முதல் பல்வேறு தளங்களில் போராடிவரும் முக்கியஸ்தர்களும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சித்தலைவரான திமுகவின் ஸ்டாலின் கடந்த வெள்ளியன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபையில் பதிலளித்த முதல்வர் ஓ.பி.எஸ், சில அமைப்பினர் சார்பில் ஒசாமா பின்லேடன் தொடர்பான பதாகைகளை வைத்திருந்தனர், தனி தமிழ்நாடு கோரிக்கை, குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்று கூறும் வகையில் பேனர்களை வைத்திருந்தனர். ‘பன்னீர் செல்வம் மரணம்’ என்கிற பேனரும் வைத்திருந்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை சமூக விரோதிகள் திசை மாற்றினர். காவிரி முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாகவும் முழக்கமிட்டனர். இதனையடுத்தே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்று கூறினார்.
கேள்விகளை தைரியமாக முதல்வர் எதிர் கொண்ட விதம், காரணங்களை பூசி மெழுகாமல் பட்டவர்த்தனமாகக் கூறி சமூக விரோதிகளை எச்சரித்த விதம், காவல்துறை நடவடிக்கை மீது விசாரணை என்ற கோரிக்கைக்கு எள்ளளவும் இடம் கொடுக்காமல் அந்தக் கோரிக்கையை நிராகரித்த விதம் எல்லாம் பன்னீர்செல்வம் பலவீனமான முதல்வர் அல்ல, பலவீனமான முதல்வர் என்ற எண்ணத்தில் யாராவது பாச்சா காட்ட ஆரம்பித்தால் அது பலிக்காது என்பதை நிரூபித்துள்ளது. உள்ளபடியே, பன்னீரின் தைரியத்தை ஸ்டாலின் உட்பட்ட எதிர்க்கட்சியினரும், அநேகமாக எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட தெரிகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ஆனால் சமூக விரோதிகளுக்கு எதிர்ப்பு என்ற நிலை சமூக ஊடக ஆர்வலர்கள் பலர் பன்னீர் செல்வத்தை புகழ்ந்து தள்ளிவிட்டனர். இதில் கட்சிசார்பற்ற பல முக்கியப் பிரமுகர்களும் உண்டு.
மத்திய மாநில அரசுகளின் போராட்ட ஆதரவை அந்தந்த அரசுகளின் பலவீனமாக சில சமூக விரோத இயக்கங்கள் நினைத்துவிட்டதன் விளைவுதான் போராட்டங்களை தங்கள் கைகளில் எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவியது.
எங்கோ டெல்லியில் அமர்ந்து கொண்டு, ஜல்லிக்கட்டின் தாத்பரியம் கூடத் தெரியாமல் ஜல்லுக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து தடை விதித்துவரும் உச்ச நீதிமன்றத்திற்கு மக்களின் உள்ளக் குமுறல் தெரிவது நல்லது என்பதாலும் மத்திய அரசு மட்டுமே இந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்காடுவதால் இந்த நீதிபதிகளின் அறியாமையை நீக்கிவிட முடியாது என்பதாலும் தான் மத்திய அரசு மறைமுகமாக இந்தப் போராட்டத்தை ஆதரித்தது. மாநில அரசுக்கும் நீதிமன்றத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப இந்தப் போராட்டம் தேவைப்பட்டது.
எனவேதான் மத்திய மாநில அரசுகள் மீதும் மோடி, பன்னீர் செல்வம் ஆகியோரின் மீதும் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் தொடுத்தாலும் மாநில அரசு ஆர்ப்பாட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. மாறாக அமைதி வழியில் போராடுமாறு கூறி முழு ஒத்துழைப்பு நல்கி வந்தது. இதை சில லெட்டர்பேட் சமூக விரோத இயக்கங்கள் பலவீனம் எனக் கருதி, ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தின் திசையை திருப்பலாயின. இதில் தேசியக் கொடியை அவமதிப்பதிலும் தனித் தமிழ்நாடு கோஷத்தை முன்வைப்பதிலும் அவர்கள் காட்டிய ஆர்வம் அலாதி.
ஜல்லிக்கட்டுக்காக துவக்கம் முதல் போராடிய முக்கியஸ்தர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அவர்களோடு இரவுபகல் பாராமல் ஆதரவாக நின்ற அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்னுக்குத் தள்ளப்பட்டார். மத்திய பாஜக அரசின் ஒத்துழைப்பும் மாநில அரசின் முயற்சிகளும் மறைக்கப்பட்டு பழிக்கப்பட்டன. மோடிக்குப் பாடை தூக்கினார்கள், ‘மோடி மெரினா பக்கம் வாடி’ என்று வக்கிர கோஷம் எழுப்பினார்கள். கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவதூறு பேசிய சில இளைஞிகள் ஜல்லிக்கட்டு வேண்டுமென்றால் இன்னமும் அசிங்கம் அசிங்கமாக சத்தமாகப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது இளம்பெண்கள் எந்த அளவிற்கு சீரழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு போதிய நிரூபணம். இந்தப் பதாகைகளின் புகைப்படங்களும் ஆபாசத் திட்டல்களின் வீடியோக்களும் உளவுத்துறையின் கைகளில் செல்லச் செல்ல உளவுத்துறை உஷாரானது.
தனிநாடு கோரும் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான மே 17 இயக்கம், இஸ்லாமிய மதவெறி இயக்கமான எஸ்.டி.பி,ஐ. மற்றும் இதர சில இயக்கங்கள், உதயகுமாரின் சர்ச் நன்கொடை பெறும் கூடங்குளம் இயக்கம், பூவுலகின் நண்பர்கள் இயக்கம், நக்சல் இயக்கங்களான மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இயக்கங்களின் ஆதிக்கம் ஆர்ப்பாட்டத்தில் முழுமை பெற இனியும் ஆர்ப்பாட்டத்தை நடத்த விடுவது நல்லதல்ல என்ற முடிவுக்கு மாநில அரசு தள்ளப்பட்டது.
எம்.ஜி,ஆரின் வருகைக்குப் பிறகு நீர்த்துப்போன பிரிவினை இயக்கங்கள் ஜெயலலிதாவின் வருக்கைக்குப் பிறகு வாலைச் சுருட்டிக் கொண்டு அவ்வப்போது குரைத்துக் கொண்டிருந்தன. ஜெயாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் இவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்திருப்பதாக இவர்கள் எண்ணி இருக்க வேண்டும். பலவீனமான ஒரு முதல்வர், தமிழகத்தில் சொல்லும் அளவிற்கு ஆதரவில்லாத மத்திய அரசின் கட்சி என்று இவர்கள் கணக்கிட்டு செயலில் இறங்கியதன் விளைவு, செமத்தியாக சூடுபட்டுச் சென்றுள்ளனர்.
தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நல்ல எண்ணத்தோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் இந்த உண்மையை உடனடியாக உணர்ந்து கொண்டு தாங்கள் எந்த நிலையிலும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.
சபரிமலை சர்ச்சை
மிருகங்கள் நலன் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது போலத்தான் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கிலும் பெண்கள் உரிமை என்பது போல தவறான முடிவை நோக்கி உச்ச நீதிமன்றம் செல்வதாகத் தெரிகிறது. சில பாரம்பரிய பழக்க வழக்கங்களை, சமயசார்புள்ள பழக்க வழக்கங்களை மதிப்பதற்கு நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாநில அரசு, தேவஸ்வம் போர்டு கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுவரை பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது பெண்மையின் மாண்பு காக்கத்தானே தவிர உரிமையை மறுக்க அல்ல என்பதை இந்த நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும். 48 கிமீ மலைப்பாதையில் நடப்பதன் சிரமங்கள், 6 கிமீ பம்பை பாதையில் நடப்பதன் சிரமங்கள், பலமணிநேரம் இயற்கை கட்டுப்படுத்தி காத்திருப்பதன் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வார்களா நீதிபதிகள்?