தமிழகத்தில் 13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு வருவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறைச் செயலர் டிகே.ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்திய கலங்கரை விளக்கம் தினத்தை முன்னிட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை சார்பில் இந்திய கலங்கரை விளக்கத் திருவிழா சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பாடகர் ஸ்ரீஹரிகரனின் இசைக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் கண்காட்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்க வந்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத் துறைச் செயலர் டிகே.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மொத்தம் 203கலங்கரை விளக்கங்கள் உள்ளன.ஒவ்வொரு கலங்கரை விளக்கத்துக்கும் சிறப்புமிக்க வரலாறு உண்டு. இதுகுறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும், கலங்கரை விளக்கத்தை மக்கள் விரும்பும் சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையிலும் இந்த திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ரூ.60கோடி மதிப்பில் 75 கலங்கரைவிளக்கங்கள், நவீன சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கலங்கரை விளக்கங்களுடன் புதிதாக அருங்காட்சியகம், சிற்றுண்டியகம், திறந்தவெளி ஓய்வறை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படும்.
கடல்சார் இந்திய உச்சி மாநாடு: அந்தவகையில், தமிழகத்தில் மாமல்லபுரம், பழவேற்காடு (புலிகாட்), பூம்புகார், காரைகால், நாகப்பட்டினம், கோடியக்கரை, மல்லிப்பட்டினம், பாம்பன், கீழக்கரை, தனுஷ்கோடி, மணப்பாடு, கூத்தன்குழி, கன்னியாகுமரி ஆகிய13 கலங்கரை விளக்கங்கள் மேம்படுத்தபட உள்ளன.
உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு வரும் அக். 17, 18, 19-ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், இந்திய கலங்கரை விளக்க ஆணையகரக துணை இயக்குநர் டி.வெங்கட்ராமன், கலங்கரை விளக்கம் இயக்குநர் ஜெனரல் என்.முருகானந்தம், சென்னை கலங்கரை விளக்கம் இயக்குநர் கே.கார்த்திக் செஞ்சுடர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.