‛‛தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது” என நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும். திருநெல்வேலி அல்வாவை போல் நெல்லை மக்களும் இனிமையானவர்கள்.
தமிழக மக்கள் பா.ஜ., பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன். பாஜ அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. உங்களின் நம்பிக்கையை பாஜ., நிச்சயம் நிறைவேற்றும் என்பது எனது உத்தரவாதம். தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள். தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஒரே கட்சி பா.ஜ., தான். தமிழக மக்கள் பா.ஜ.,வை நோக்கி வர துவங்கி உள்ளனர். நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும். மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. இது மத்திய அரசின் செயல்பாடுகளால் கிடைக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மதிப்பு அதிகரித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இது இன்று,1 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது. உஜ்வாலா இலவச எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் எனக்கான பெண்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது.
இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம் மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள். நான் இதை தொடர விட மாட்டேன். இது எனது உத்தரவாதம். பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் கோயில் அமைந்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் பற்றி பார்லிமென்டில் விவாதம் நடந்த போது தி.மு.க., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக.,வும் காங்கிரசும் நாட்டை பிரிக்கின்றன. தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் எம்.பி., ஆக்கி உள்ளோம். அவரை ம.பி.,யில் இருந்து தேர்வு செய்துள்ளோம். தமிழகத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனது அரசில் அங்கம் வகிக்கிறார். தமிழகம் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.
கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளோம். திமுக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை வெளியிட்டுள்ளனர்; இந்திய ராக்கெட் இடம்பெறவில்லை. இது, விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கு அவமானம். இஸ்ரோவின் பெருமையை திமுக., தட்டி பறிக்க முயற்சி செய்கிறது. நாட்டின் வளர்ச்சி திமுக கண்களுக்கு தெரிவது இல்லை தமிழர்கள் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவாக இருப்பார்கள்; மக்களின் நம்பிக்கையை பா.ஜ., அரசு காப்பாற்றும். டில்லிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தூரம் குறைந்து நெருக்கமாகியுள்ளோம்.
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழக அரசு குறை சொல்கிறார்கள். நாட்டைக் கொள்ளை அடிப்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை தடுத்து வருகின்றனர். தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டவில்லை; உங்கள் வரியை உங்களுக்கே திட்டங்களாக வழங்குகிறோம். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவமும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டமும் என்னிடம் உள்ளது. தவறானவர்கள் திருந்த வேண்டிய நேரம் இது. மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வளர்ச்சி அடைந்த தமிழகம் மிக அவசியம். நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. விருதுநகரில் பிரதமர் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழக இளைஞர்களுக்கு மருத்துவம், பொறியியல் தமிழில் கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழியிலேயே உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது; ‘ஏ.ஐ’ தொழில் நுட்பம் மூலம் உங்கள் மொழியின் வலிமை அதிகரிக்கப்போகிறது. உலகத்தரமான வசதிகள் நம் நாட்டு ஏழை மக்களுக்கு கிடைக்கும் வகையில் பாஜ., பணியாற்றுகிறது. தென் தமிழக மக்களின் பிரச்னைகளை பாஜ., நன்கு அறிந்துள்ளது. நாங்கள் இந்த பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவோம். இது எனது உத்தரவாதம்.
முன்பு திமுக., தலைவர், தனது வாழ்நாள் முழுவதும் தனது மகனை முதல்வராக்க பாடுபட்டார். தற்போதைய முதல்வரும் தனது மகனை முதல்வராக்க முயற்சி செய்கிறார். திமுக.,வினர் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். என்ன வளர்ச்சி பணிகளை செய்யப் போகிறோம், என அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை. ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. ஆனால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பாஜ., கவலைப்படுகிறது.
தி.மு.க., குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவியில் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க., காங்கிரஸ் சம்பாதிக்க நினைக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டால் தி.மு.க.,விடம் பதில் இருக்காது. தேசத்தின் ஒற்றுமை என்றும் அவர்களுக்கு இல்லை.
தி.மு.க.,வும் காங்கிரசும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள். தி.மு.க.,வை இனி தேடினாலும் கிடைக்காது. முற்றிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சி திமுக. மக்கள் நலத்திட்டங்களை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன. தமிழகம் எப்போதும் நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இங்கு எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். நான் என்ன பேசுகிறேன் என்று ஆர்வத்தோடு கேட்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய 100 கோடி வணக்கம். தமிழில் பேச முடியவில்லை என்று நான் வருத்தப்படுகிறேன்.என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன்.(அப்போது கூட்டத்தை நோக்கி பிரதமர் மோடி கையெடுத்து கும்பிட்டார்)
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இன்று பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகம் எனக்கு இத்தகைய ஆதரவு ஆசிர்வாதம் தருவது எனது பாக்கியம். நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அதை விட அதிகமாக நான் உங்களுக்காக உழைப்பேன். சுயநலமிக்கவர்களை மக்கள் புறக்கணிப்பர். கடந்த தேர்தலில் பெற்றதை விட பாஜ., அதிக இடங்களை கைப்பற்றும். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.