தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து ஜனவரி இறுதியில் அறிவிப்போம் என்று கட்சியின்தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.
தை மாதம் பிறந்த பிறகு,கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின்கருத்துகளைக் கேட்க உள்ளேன்.அவர்கள் வாக்காளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள். அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தமாகா தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக ஜனவரி மாத இறுதியில் அறிவிப்போம். தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சியாக தமாகா உள்ளது.
வட மாநிலங்களில் தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறும்என்று தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி.அதேபோல, தேசிய அளவில் பாஜக பெரிய கட்சி. நாங்கள் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிககட்சிகளுடன் நட்புடன் இருக்கிறோம். அதேநேரத்தில், யார், எந்தக் கூட்டணிக்குச் செல்வார்கள் என்று என்னால் யூகமாக கூறமுடியாது. எதிரியை வீழ்த்த சரியான வியூகம் தேவை. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்.பி. சித்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.