தனிமையில் இனிமை – ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனைகள்

 

சுனாமி வந்ததற்கு பிறகு சுனாமி எனும் ஜப்பானிய வார்த்தை நமக்கு பழகிவிட்டதை போல கம்ப்யூட்டர் மருத்துவம் போன்ற சில துறைகளில் தனிமைப்படுத்துதலை குறிப்பிட அதிகம் புழங்கப்படும் வார்த்தைகளான ஐசுலேஷன், க்வாரன்டைன் போன்ற சில வார்த்தைகள் கொரோனா தாக்கத்திற்கு பிறகு பொதுமக்களால் இன்று சர்வ சாதாரணமாக பேசப்பட்டு வருகிறது என்றால் அது மிகை அல்ல.

தனிமை வரமா சாபமா: தனித்திரு விழித்திரு பசித்திரு என்றார் வள்ளலார் ஆன்மீக வாழ்விற்கு அது சரியான உபாயம்தான் ஆனால் காலம் காலமாக சமுதாய கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகிய நம் மனித இனத்திற்கு திடீரென்ற தனிமை சற்றே கொடிது. போட்டிகள் நிறைந்த வாழ்க்கை ஓட்டம், வேகமான வாழ்வியல், நிறைவேற்ற வேண்டிய கடமைகள், லட்சங்கள், லடச்சியங்கள் என வாழ்ந்து பழகிய மனிதர்களுக்கு உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக அல்லது நோய் இருக்குமோ எனும் சந்தேகத்தின் காரனமாக ஏற்படுத்தப்படும் இந்த திடீர் தனிமை நம் மனதை சற்றே ஆட்டம் காண வைத்துள்ளது என்பது முற்றிலும் உண்மையே ஆனால் இது நம்மை கொடுமை படுத்த அல்ல இது நம்மை, நம் குடும்பத்தை, நம்மை சுற்றியுள்ள சமுதாயத்தை காக்கவே அரசு எடுக்கும் முயற்சி. இந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாம் தனிமைப்படுவது என்பது ஒரு சிறிய தியாகம், இது ஒரு விதத்தில் நாம் செய்ய வேண்டிய தேசசேவையும் கூட என்பதே உண்மை. நாம் உடலால் மட்டுமே குடும்பத்தை விட்டு, நண்பர்களை விட்டு, சமுதாயத்தை விட்டு பிரிந்துள்ளோமே தவிர மனதால் அல்ல, இன்றைய நவீன தொழில்நுட்பங்களான அலைபேசி, இணையம், முகநூல், வாட்ஸப் போன்றவை நம்மை அவர்களுடன் எப்போதும் இணைத்து வைக்க பெரிதும் உதவுகின்றன என்பதால் இந்த தற்காலிக தனிமையை நாம் எளிதில் கடந்துவிடலாம். இவற்றை நன்கு உணர்ந்தால் தனிமை சாபமல்ல அது நாம் புத்துணர்ச்சியுடன் இந்த உலகை மீண்டும் அணுக நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம் என்பது நன்கு விளங்கும்.

இளமையில் தனிமை: கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்படும் இந்த திடீர் தனிமையால் நடக்கும் தற்கொலைகள், மனநலம் பாதிப்பு போன்ற விஷயங்களில் அதிகம் பாதிக்கப்படுவது இன்றைய இளைய சமுதாயமே. உடலளவில் சற்றே தளர்வடைந்திருந்தாலும் தங்களின் நீண்ட அனுபவத்தால் இளைஞர்களைவிட பெரியவர்கள் மனதளவில் மிகவும் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர் எனவே அவர்கள் இந்த தனிமையை எளிதில் கடந்துவிடுகின்றனர்.

மனநல மருத்துவரின் ஆலோசனை: இந்த திடீர் தனிமைப்படுத்துதலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, அதை பயனுள்ளதாக மாற்ற, மனவலிமையை பெருக்கிக்கொள்ள பிரபல மனநல மருத்துவர் சரவணன் அவர்கள் நம் விஜயபாரத வாசகர்களுக்காக சில மனநல ஆலோசனைகளை தக்க உதாரணங்களோடு மிக எளிமையாக விளக்கியுள்ளார். இதனை பயன்படுத்தி நாமும் மனவலிமை பெறுவோம், தனிமைப்பட்டுள்ள நமக்கு தெரிந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இதனை பார்க்க செய்து அவர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றுவோம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – திருக்குறள்

ஜே எஸ் சங்கீதா