தனது வியாபாரத்தைவிட சங்கப் பணிக்கு அதிக நேரம் கொடுத்த கோவர்தன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, கோவர்தன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

ஜமுனா தாஸ் கொத்வாலா −- ருக்மணி அம்மாளுக்கும் மகனாக, 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயதசமி அன்று சென்னையில் பிறந்தார், கோவர்தன் ஜி. பள்ளிக் கல்வி முதல் பி.யூ.சி படிப்பு வரை, சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படித்தார். அதனைத் தொடர்ந்து, தனது குடும்பத் தொழிலாளான நவரத்தினக் கல் வியாபாரத்தை செய்து வந்தார்.

தனது தாய் மாமா பிரஜ் பிஹாரி கஸ்ஸேரா மூலம், சங்கத்திற்கு அறிமுகம் ஆனார். 1970 ஆம் ஆண்டு காலத்தில், ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தனது தாய் மாமாவுடன் சென்ற கோவர்தன் ஜி, அங்கு பரமபூஜனீய ஸ்ரீ குருஜியின் சிறப்புரையை கேட்டு ஊக்கம் பெற்று, ஷாகா வர ஆரம்பித்தார்.

முதலாம் ஆண்டு பயிற்சி முகாமை 1981 ஆம் ஆண்டிலும், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாமை 1982 ஆம் ஆண்டிலும், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமை 1987 ஆம் ஆண்டிலும் முடித்தார்.
வருடம் தோறும் நடக்கும் சங்கப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார். அதற்கு பீஷ்மாஜியே முழு முதல் காரணம் என அவரது மகள் கூறினார்.

ஒரு முறை பீஷ்மா ஜி, கோவர்தன் ஜியை முகாமிற்கு அழைத்த போது, வியாபாரத்தை விட்டு வருவது கடினமாக இருக்கும் என்றார். உடனே பீஷ்மா ஜி வருடத்திற்கு சில நாட்கள் நீங்கள் சங்கத்திற்கு கொடுக்க வேண்டும் எனக் கூறி, அவரை அழைத்தார், பீஷ்மாஜியின் அழைப்பிற்கு இணங்க, தொடர்ந்து பல வருடங்கள் சங்கப் பயிற்சி முகாமில் இருப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

எந்த ஒரு வியாபாரியும், தனது வியாபாரத்தை தவறவிட மாட்டார்கள். ஆனால் கோவர்தன்ஜி, சங்கப் பணிக்காக தனது கடையை பல நாட்கள் அடைத்து வைத்து, சங்கப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார். அவரைத் தொடர்ந்து, சௌகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பலர், சங்கத்திற்கு அறிமுகமானதுடன், முகாமில் தொடர்ந்து இருப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மிகவும் அன்பாக பழகினாலும், பேசினாலும் சங்கஸ்தானில் பாடம் எடுக்கும் போது மிகவும் கறாராக இருந்து பயிற்சி அளிப்பார்.

யாரேனும் ஷாகாவிற்கு வரவில்லை என்றால், அவர்களது வீட்டிற்கு உடனே சென்று விடுவார். அவர்களை அழைத்துக் கொண்டு கையோடு ஷாகா வருவதை வழக்கமாகக் கொண்டவர். தனது தொழிலில் எப்போதும் நேர்மையாகவே இருப்பார். யாருக்கேனும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்வார். கொடுத்த பணத்தை திரும்ப கேட்கக் கூடாது என்ற கொள்கையுடன் அவர் வாழ்ந்ததாக, அவரது மகள் நம்மிடம் தெரிவித்தார்.

சௌகார்பேட்டை பகுதி முழுவதும் சங்கமயமாக கோவர்தன் ஜியே முக்கியக் காரணம் என்றால், அது மிகையல்ல. தினமும் கார்யகர்த்தர்கள் வீட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டவர். அவர்களுக்கு குடும்பத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை சரிசெய்து நல்வழி காட்டி, திரும்பவும் சங்க வேலை செய்ய வழிகாட்டுவார்.

எந்த ஒரு பைட்டக்கையும் அவர் தவற விட்டதே இல்லை. தான் செல்ல வேண்டியதாக இருந்தால், அது எவ்வளவு தூரமாக இருந்தபோதும், பேருந்தில் பயணம் செய்து முதல் நபராக பங்கேற்பார்.
கார்யகர்த்தர்கள் வீட்டுக்கு செல்லும்போது ஸ்வயம்சேவர்களையும் அழைத்துச் சென்று, அவர்களுக்கு எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமையை வளர்த்து, சங்க வேலையில் ஈடுபாட்டுடன் வேலை செய்ய முன்மாதிரியாக விளங்கினார்.

அவரது வீடு “மினி கார்யாலயம்” என்றே அழைக்கப்படும். எப்போதும் ஏதேனும் ஒரு கார்யகர்த்தர் அவரது வீட்டில் இருப்பார்கள். அனைவர் மீதும் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் செயல்பட்டதால், ஸ்வயம்சேவர்களுக்கு கோவர்தன் ஜி மீது அன்பு கலந்த மரியாதை இருந்தது. அவரது மகன் திருமணம், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், சென்னையில் இருந்து சென்ற ஸ்வயம்சேவர்களே.

இதன் மூலம் எந்த அளவிற்கு அவர் மீது ஏனைய கார்யகர்த்தர்கள் அன்பு வைத்துள்ளனர் என்பது நமக்கு நன்கு புலப்படும். தன் வீட்டு திருமணத்தைப் போல அனைத்து வேலைகளையும், ஸ்வயம்சேவகர்கள் இழுத்து போட்டு செய்ததைக் கண்ட கோவர்தன் ஜியின் உறவினர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

நமது வாழ்வில் எந்த சூழ்நிலை வந்தாலும், சங்க வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும், எந்த ஒரு சூழ்நிலையிலும் சங்க வேலை செய்வதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த கோவர்தன் ஜி, மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்துவார்.

யாருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்ட போதும் நேரடியாக களத்திற்கே சென்று, அதை தீர்த்து வைத்து, மீண்டும் அவர்களை சங்க வேலை செய்ய ஊக்கம் அளிப்பார்.
கோவர்தன் ஜி வீட்டிற்கு சிவராம் ஜி, பீஷ்மா ஜி, கோவிந்தா ஜி, இராம கோபாலன் ஜி, இல கணேசன் ஜி என பல அகில பாரத அதிகாரிகள், ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி கௌசல்யா அம்மாளை திருமணம் செய்த கோவர்தன் ஜிக்கு பிரீத்தி என்ற மகளும், முகுந்த் என்ற மகனும் உள்ளனர். தந்தை வழியிலேயே முகுந்த் ஜியும் நவரத்தினக் கல் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

சங்கப் பணியையே முழுமூச்சாக கொண்ட கோவர்தன் ஜி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். தனது வியாபாரத்தைவிட சங்கப் பணிக்கு அதிக நேரம் கொடுத்த கோவர்தன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.