தத்தாத்ரேயர்

பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்தியரும் ஒருசேர இணைந்த அவதார ஸ்வரூபமாக விளங்குபவர் தத்தாத்ரேயர். தத்தா என்ற சொல்லுக்கு “கொடுக்கப்பட்டவர் என்று பொருள். சப்த ரிஷிகளில் இரண்டாவது ரிஷியான அத்ரியின் மகன் என்பதால் ஆத்ரேயா என்று பெயர். அதாவது மும்மூர்த்திகள் தங்களையே, அத்ரி அனுசூயா தம்பதிக்கு மகனாக கொடுத்ததால் தத்தாத்ரேயர் என்ற பெயர்.

கற்பு நெறி தவறாத அனுசூயாவைக் கண்டு மும்மூர்த்திகளின் மனைவிகளுமே பொறாமை கொண்டார்கள். அவளின்கற்பை சோதனை செய்து பார்க்க வேண்டும் என தமது கணவன்மார்களை வேண்டிக் கொண்டனர்.  அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முனிவர்கள் போன்று மாறுவேடமிட்டு அத்ரி முனிவர் இல்லாத போது அனுசூயாவின் குடிலுக்கு சென்று உணவு கேட்டார்கள்.மூவருக்கும் இலை போட்டு உணவு பரிமாற முற்பட்டாள். உணவை பரிமாற வந்தவளிடம் அவர்கள் வைத்த கோரிக்கை வித்தியாசமானது. உடலில் ஆடை இல்லாமல் உணவு பறிமாறினால் மட்டுமே, உணவருந்துவோம் என்று கூறினர். அவள் தனக்கு வழி காட்ட வேண்டுமென்று கணவரை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த கணமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள். அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து தனது மார்பில் பாலூட்டினாள். அவள் கணவர் திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டறிந்தார். ஞான திருஷ்டியினால் நடக்கபோவதையும் அறிந்தார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி விளையாடின.

மும்மூர்த்திகள் திரும்பி வராததைக் கண்டுபயந்து போன மூன்று தேவியரும், அனுசூயாவிடம் சென்று மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். மும்மூர்த்திகளை மீண்டும் பழைய நிலைக்கு ஆக்க தன் கணவனை வேண்டினாள் அனுசூயா. மும்மூர்த்திகளும் தமது உண்மையான ரூபத்தை அடைந்தனர். அனுசூயாஅத்ரி முனிவர் தம்பதிகளுக்கு விஷ்ணுவே மகனாகப் பிறப்பார், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்ரேயர் என்ற அவதூதராக பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என ஆசியளித்துச் சென்றனர். அவர்கள் கூறியபடியே தத்தாத்ரேயர் பிறந்தார்.

இறைவனே குழந்தையாகப் பிறந்ததால், தத்தாத்ரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை. சிறிது வளர்ந்ததும் பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் என்பதல் பல ரிஷிகளும் முனிகளும் அவரை குருவாக ஏற்றுக் கொண்டார்கள். கனகபுராஎன்று அழைக்கப்படும் கர்நாடகாவில் உள்ள ஒரு ஊரில் அவர் ஞானம் பெற்றதாகவும் கிர்னாரில் ஒரு தனிமையான சிகரத்தில் அவரது அசல் கால்தடங்களை இன்னும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது. பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன. அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான பிராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

ர். கிருஷ்ணமூர்த்தி