புதுடில்லி உரிய அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக் கூறி, டில்லி பெண்கள் கமிஷனில் பணியாற்றிய 52 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டில்லி பெண்கள் கமிஷனில் சட்டவிரோதமாக பலர், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. கடந்த 2017ல் இது தொடர்பாக விசாரிக்க, அப்போதைய தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2017 ஜூனில் தன் அறிக்கையை தாக்கல் செய்தது.
இதன்படி டில்லி பெண்கள் கமிஷனில், 223 பணியிடங்கள் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பணியிடங்களில் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களை நீக்குவதற்கு, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பரிந்துரை செய்திருந்தது.
இதை ஏற்று, அந்தப் பணியிடங்களில் சேர்ந்தவர்களை நீக்குவதற்கு துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, சட்ட விரோதமாக பணியில் சேர்க்கப்பட்ட 52 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 223 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 223 பணியிடங்கள் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டதாகவும், 52 பேர் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டதாகவும், டில்லி அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு, டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மியின் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான ஸ்வாதி மலிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: டில்லி பெண்கள் கமிஷனில், 90 பேர் பணியாற்றுகின்றனர். இதில், எட்டு பேர் மட்டுமே அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.
மற்ற இடங்களுக்கான ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவை சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட பதவிகளும் இல்லை. துணை நிலை கவர்னர், துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறார். இதை எதிர்த்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.