டில்லியில் தேர்தல்: ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஓட்டளிப்பு

டில்லியில் உள்ள ஓட்டுச்சாவடியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.

ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. டில்லியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஓட்டளித்தார். பிறகு அவர் தனது விரலை காட்டி, அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

டில்லியில் உள்ள ஓட்டுச்சாவடியில், துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், அவரது மனைவி லட்சுமி, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திரா சச்தேவா, டில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி, பா.ஜ.,வின் வடமேற்கு டில்லி வேட்பாளர் யோகேந்திர சந்தோலியா ஆகியோர் ஓட்டளித்தனர். டில்லியில் ஓட்டளித்த பின், நிருபர்கள் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறியதாவது: நான் ஓட்டளித்த ஓட்டுச்சாவடியில் நான் தான் முதல் ஆண் வாக்காளர். இது ஒரு முக்கியமான தருணம் என்பதால், அதிகமான மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் எனக் கூறினார்.

ஹரியானா மாநிலம் கர்னால் என்ற இடத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில், அம்மாநில முன்னாள் முதல்வரும், கர்னால் லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளருமான மனோகர் லால் கட்டார் வாக்களித்தார். பின்னர் அவர், ” இந்த ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். என்னை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எனக்கு சவாலானவர் அல்ல” என தெரிவித்தார். ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தனது சொந்த கிராமமான மிர்சாபூரில் உள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளித்தார். முன்னதாக, அவர் மிர்சாபூரில் உள்ள குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார். நிருபர்கள் சந்திப்பில், ” ஜனநாயகத்தை வலுப்படுத்த ஹரியானா மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்” என ஹரியானா முதல்வர் நயாப் சிங் தெரிவித்தார்.