திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொலைபேசியில் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது. இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாப்பட உள்ளது. இதையொட்டி டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், சர்வ தரிசன டோக்கன்கள் 5 லட்சமும் ஆன்லைனில் வழங்கப்படும்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருமலையில் இலவச பேருந்துகளில் பயணிகள் இறங்க வேண்டிய இடம் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படும். திருமலையில் உள்ள ஓட்டல்களில் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. மேலும் பக்தர்களிடம் டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார் கூறியுள்ளனர். இந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்படும்.
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 முதல் 23-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய நாட்களாக அக்டோபர் 19-ம் தேதி இரவு கருட வாகன சேவை, 20-ம் தேதி பூப்பல்லக்கு சேவை, 22-ம் தேதி தங்க ரத ஊர்வலம், 23-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாகன சேவைகள் காலை வேளைகளில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு வேளைகளில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபெறும். பிரம்மோற்சவ நாட்களில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்கள், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு முதல் நாளே பக்தர்கள் வருகையால் திருமலையில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, வெளியே சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.