ஞானவாபி மனுதாரருக்கு கொலை மிரட்டல்

ஔரங்கசீப் காசியில் உள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு அங்கு கட்டியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டமைப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வாதியாக உள்ள ஐந்து பெண்களில் ஒருவரான லக்ஷ்மி தேவியின் கணவரான சோஹன் லால் ஆர்யாவுக்கு, பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இதுகுறித்து ஆர்யா, வாரணாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். அதில், கடந்த மார்ச் மாதம் முதல் தனக்கு ‘தலை துண்டிக்கப்படும்’ என்ற கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாகவும், கடந்த ஜூலை 20ம் தேதி பாகிஸ்தான் எண்ணைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத அழைப்பாளரிடமிருந்து ஒரு மிரட்டல் வந்ததாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த நபர், வழக்கைத் திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினார். மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ராஜஸ்தானில் கன்னையா லாலை கொன்றதை போலவே தலையை துண்டித்து கொலை செய்யப்படுவார் என மிரட்டியுள்ளார். அவருக்கு 2306812337 மற்றும் 923254713522 ஆகிய எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன.  மேலும், ஆர்யா தனது வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான மர்ம நபர்களின் நடமாட்டத்தைக் கவனித்ததாகவும் கூறியுள்ளார். புகாரைத் தொடர்ந்து, ஆர்யாவின் வீட்டிற்கு வெளியே இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆர்யா கூறுகையில், “இந்த மிரட்டல்களின் பின்னணியில் சில பயங்கரவாத அமைப்புகள் இருக்கலாம். அவர்களின் அச்சுறுத்தல்களால் எங்களை பயமுறுத்தமுடியாது. நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது எங்கள் அதிர்ஷ்டம். கொலை மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை. நாங்கள் சிவனின் பாதுகாப்பில் இருக்கிறோம். தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக இருக்கும்” என்று கூறினார்.