ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில், ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகியுடன் பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார். ஆப்கானிஸ்தான் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அதில் விவாதிக்கப்படும். ஆப்கானிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் அதிகரிப்பதை பாரதம் பொறுத்துக்கொள்ளாது என்ற உண்மையை ஜெய்சங்கர் அழுத்தமாக வலியுறுத்த வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பிலிருந்தும் இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், இந்த ஆண்டு ஜூன் மாதம் காபூலில் பாரதம் தனது தூதரகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்ததிலிருந்து ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் பலமுறை ஜெய்சங்கருடன் ஒரு சந்திப்பைக் கோரி வருகின்றனர். இந்த சந்திப்பு நடந்தால், ஜெய்சங்கர் மற்றும் முட்டாகி இடையே இதுவே முதல் சந்திப்பாக இருக்கும். எஸ்.சி.ஓ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான சந்திப்பும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி சிங் தலைமையில் ஒரு அதிகாரப்பூர்வ குழுவை பாரதம் காபூலுக்கு அனுப்பியது. ஜே.பி சிங், முட்டாகியும் அதிகாரபூர்வமாக சந்தித்து பேசினர். அவரும் இந்த ஷாங்காய் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.