‘ஜூன் 4-ம் தேதி பாஜகவும் பங்குச் சந்தையும் உச்சம் தொடும்’ – பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டு காலத்தில் பங்குச் சந்தை அடைந்த வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘பங்குச் சந்தையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சீர்திருத்தங்கள் குறித்து நம் முதலீட்டாளர்கள் நன்கு அறிவார்கள். இந்த சீர்திருத்தங்களால் இந்திய பங்குச் சந்தை வெளிப்படைத் தன்மையுள்ளதாகவும் வலுவானதாகவும் மாறியுள்ளது.
இதனால், ஒவ்வொரு இந்தியரும் பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. நான் உறுதியாக சொல்கிறேன். ஜூன் 4-ம் தேதி பாஜக இதுவரை இல்லாத அளவில் அதிக இடங்களை கைப்பற்றும். அதேபோல் பங்குச் சந்தையும் புதிய உச்சம் தொடும். 2014-ம் ஆண்டு நான் பிரதமராக பொறுப்பேற்ற சமயத்தில் சென்செக்ஸ் 25,000 ஆக இருந்தது. தற்போது அது 75,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 2.3 கோடியிலிருந்து 15 கோடியாக உயர்ந்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்திய பங்குச் சந்தை செயல்பாட்டில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மிக முக்கிய பங்களிப்பு வழங்குகின்றனர். பாஜக தலைமையிலான ஆட்சியின் காரணமாக இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது” என்றார்.