குஜராத் மாநிலத்தின் தலைநகரம் காந்திநகரில் இருந்து 355 கி.மீ. தூரத்திலுள்ள பெரிய நகரம் ‘ஜுனாகட்’.
ஒன்றிணைந்த நாடாக இருந்த இந்தியா, விடுதலை பெற்றதும் மீண்டும் ஒன்றாகிவிடக்கூடாது என்பதில் ஆங்கிலேயன் கண்ணும் கருத்துமாக இருந்தான். அதனால்தான் 255 சமஸ்தானங்களையும் கூப்பிட்டு, நீ உன் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் இணைந்து கொள்” என அறிவுறுத்தினான்.
இந்நிலையில் ‘ஜுனாகட்’ என்னும் சமஸ்தானம் மொகம்மது மகாபத் கச்சி III என்னும் முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. அதனுடைய திவானாக (இன்றைக்கு பிரதம மந்திரி ரேங்க்) ஷாநவாஸ் புட்டோ இருந்து வந்தார். இவர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்து தூக்கிலிடப்பட்ட ஜுல்பிகர் அலி புட்டோவின் தந்தை!
இந்த ஜுனாகட் முஸ்லிம் அரசனால் ஆளப்பட்ட ஹிந்து மெஜாரிட்டி பிரதேசம். ஆரம்பத்தில் மௌரிய பேரரசர்களால் உருவாக்கப்பட்டு, 1807ம் ஆண்டு முதல் மொகலாயர்களால் ஆளப்பட்டு வந்தது. சுமார் 8,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதியில் 1921ம் ஆண்டே 4 லட்சம் பேர் வசித்தனர். இந்த தகவல்கள் தரக் காரணம் இல்லாமல் இல்லை.
1947ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சுதந்திர சட்டம் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 13 இந்தியா-பாக் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு விடுதலை அறிவிக்கப்பட்டது.
எந்த சமஸ்தானம் யாருடன் சேர்ந்துகொள்ள வேண்டுமோ அவர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றபோதும் ஜுனாகட் அரசன் மொகம்மது மகாபத் கச்சி III முடிவெடுக்காமலே இருந்தார். ஆனால் திவான் ஷாநவாஸ் புட்டோவின் தூண்டுதலால் பாகிஸ்தானோடு சேர ஒப்பந்தம் அனுப்பினார். அதே சமயம் அரசனின் ஆலோசகர் நபிமகஷி என்பவர் இந்தியாவோடு சேருவதுதான் சரி என ஆலோசனை வழங்கினார்.
பாகிஸ்தான் ஜுனாகட்டை தன்னோடு இணைத்துக்கொள்வதாக அறிவித்தது. இப்போதுதான் அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் விரைந்து செயல்பட்டு திவான் ஷாநவாஸ் புட்டோவிற்கு தந்தி அனுப்பி ஜுனாகட் இந்தியாவோடு சேருவதாக அறிவித்தார்.
ஆனால் முஸ்லிம் மன்னரும் திவான் புட்டோவும் இதை ஏற்காமல் போரிடத் தயாராயினர். படேல் இந்திய ராணுவத்தை அனுப்பினார். விளைவு திவானும் அரசனும் நாட்டைவிட்டு பாகிஸ்தானுக்கு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் கூட இதுபற்றி அப்போதைய ‘மதசார்பற்றவாதிகள்’ பெரும் விவாதம் நடத்தினர். படேல் உறுதியாக இருந்தார். தேவையானால் பொதுவாக்கெடுப்பு நடத்துவேன் எனக் கூறி 1948 பிப்ரவரியில் அதை நடத்தினார். அத்தனை மக்களும் இந்தியாவுடன் இருக்கவே விரும்பினர். அடுத்த நாள் வாக்கெடுப்பு முடிவுகள் ஏற்கப்பட்டது. ஆனாலும் 1947 நவம்பர் 9 அன்றே ஜுனாகட் இந்தியாவோடு சேர்த்துக்கொள்ளப்பட்டது!
படேல் என்னும் ஜுனாகட் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களும் இந்தியாவில் இணைந்தன.