‘ஜாபர் சாதிக் கட்டளைபடி போதை பொருள் கடத்தினோம்’: கூட்டாளிகள் வாக்குமூலம்

 

போதை பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது கூட்டாளிகள் முகேஷ், 33, முஜிபுர், 34, அசோக்குமார், 34, மற்றும் சதானந்தம், 45, ஆகியோர் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சட்டவிரோத பணி பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐந்து பேரிடமும், சிறைக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விரைவில் ஐந்து பேரையும் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் கூட்டாளிகள் அளித்துள்ள வாக்குமூலம்:

போதை பொருள் கடத்தல் தொழிலில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் கெட்டிக்காரர்கள். மூவருக்கும் சதானந்தம் தான் வலது கரம். போலீசாருக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, சென்னை பெருங்குடியில் வாடகைதாரர்கள் வசிக்கும் இடத்தை தேர்வு செய்து, வீடு ஒன்றில் போதை பொருட்களை தயாரித்தோம்.

ஜாபர் சாதிக் எங்களிடம் அதிகம் பேச மாட்டார். அவரிடம் இருந்து கட்டளைகள் மட்டுமே வரும். அவரது சகோதரர்கள் தான், வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்துவது பற்றி உத்தரவு பிறப்பிப்பர். அவசர தேவைக்கு, ஆந்திராவில் இருந்தும், ‘மெத்தம் பெட்டமைன்’ வாங்கிக் கொள்வோம். போதை பொருள் வியாபாரிகள் துணி வாங்குவது போல, பாரிமுனை பஜாருக்கு வருவர். பெரும்பாலும் ரகசிய சந்திப்புகள் அங்கு தான் நடக்கும். வெளிநாடுகளுக்கு வெற்றிகரமாக போதை பொருள் கடத்தினால், எங்களுக்கு பண்ணை வீடுகளில் ஜாபர் சாதிக் சகல விதமான விருந்தும் தருவார். அவர் இப்படி ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை, எளிதில் கண்டுபிடிக்க முடியாது. வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பொறுப்பை தம்பி முகமது சலீமிடம் தான் ஒப்படைத்து இருந்தார். எங்கள் வங்கி கணக்கு வாயிலாகவும் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.