ஜாதி மோதல்கள் தடுக்கப்பட்டன து. குப்புராமு, வழக்கறிஞர் இராமநாதபுரம் மாவட்டமுன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

 

ஆண்டு 1986 செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் இது. அங்கு உள்ள ஒரு முடி திருத்தகத்திற்கு அருகில் உள்ள கிராம ஹரிஜன சமுதாய இளைஞர் ஒருவர் தனக்கு முடிவெட்டி விடும்படி கூறிக்கொண்டு கிராமத்தில் உள்ள சலூன் கடைக்கு வருகிறார். முடிதிருத்தும் இளைஞர் “ஹரிஜனங்களுக்கு இங்கு முடி வெட்டக்கூடாது என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள். எனவே, உங்களுக்கு முடிவெட்ட முடியாது” என்று கூறி விடுகிறார். அவமானப்பட்ட ஹரிஜன சகோதரர் காவல்
துறையில் புகார் செய்கின்றார். முடிதிருத்தும் நபர் கைது செய்யப்படுகிறார்.

தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு, அந்தக் கிராமத்தில் உள்ள ஹரிஜனர் அல்லாத ஹிந்துப் பெரியவர்கள்தான் காரணம் என்று ஒரு தகவலை முஸ்லிம்கள் மூலமாக அறிந்த ஹரிஜன வாலிபர் அவர்களைப் பழிவாங்கும் வகையில் தனது சமூகத்தை ஒன்று திரட்டுகிறார்.

இந்த விஷயம் அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஸ்வயம்சேவகர்களுக்கும் தெரிய வருகிறது. இதை தடுக்க உடன் செயல்படத் துவங்குகின்றார்கள். உண்மைகள் வெளி வருகின்றன. எப்படி?

அந்தக் கிராமம் முஸ்லிம்கள், ஹரிஜனங்கள், ஏனைய ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அந்தக் கிராமத்தில் முஸ்லிம் ஜமாத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் தான் அந்த முடிதிருத்தும் நிலையம் உள்ளது.

ஜமாத்தார்களில் சிலர் இந்தச் சம்பவத்திற்கு முதல் நாள் கடை உரிமையாளரான அந்த இளைஞரைக்

.

கூப்பிடுகிறார்கள். “ஹரிஜனங்கள் இந்த ஊரில் அக்கிரமமாக நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு நீ முடிவெட்டக் கூடாது. யாராவது வந்து கேட்டால் ஊர்ப்பெரியவர்களின் முடிவு என்று சொல்லிவிடு” என்கிறார்கள்.

காலையில் சம்பவம் நடந்து முடிந்தவுடன் அந்த முஸ்லிம் பெரியவர்கள் ஹரிஜன இளைஞனைக் கூப்பிட்டு “இந்தக் கிராமத்தில் உள்ள ஹிந்துப் பெரியவர்கள் தான் உங்களுக்கு  முடிவெட்டக் கூடாது என்று சொல்லி இழிவுபடுத்தி உள்ளார்கள்; இதைச் சும்மா விடக்கூடாது” என்று தூபம் போடுகிறார்கள். இதைக் கேட்ட ஹரிஜன வாலிபன் ஹிந்துக்களுக்கு எதிராக தனது சமூகத் தலைவர்களுடன் பேசி ஒன்று திரட்டுகிறார்.

உண்மையை அறிந்த ஸ்வயம்சேவகர்கள் அந்தக் கிராமத்து ஏனைய ஹிந்துக்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். பின்பு ஹரிஜன சமூகத்தினரையும் கூட்டுகிறார்கள். உண்மை நிலவரங்களை விளக்கிக் கூறுகிறார்கள். இரண்டு சமூகத்திற்கும் இடையே பகையை மூட்டிவிட்டு லாபமடைய நினைத்து முஸ்லிம்களின் சதியை வெட்டவெளிச்சமாக்குகிறார்கள்.

உண்மையை உணர்ந்த ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயம் காவல் நிலையம் செல்கிறது. முடிதிருத்தும் இளைஞரை விடுவித்து அந்த ஊருக்கு அழைத்து வந்து, அந்த முடிதிருத்தும் இளைஞருக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறது. “நீ எல்லோருக்கும் முடிவெட்ட வேண்டும்” என்பது தான் அந்த வேண்டுகோள். அந்த வாலிபர் அதற்கு சம்மதிக்கிறார். ‘எல்லோருக்கும் முடிவெட்டுவதானால் உனக்கு நாங்கள் கடை தரமுடியாது’ என்றது முஸ்லிம்களின் ஜமாத்.

உடனே ஹிந்துப் பெரியவர்களில் ஒருவர் ‘நான் புதிதாக ஒரு கடை கட்ட இடம் தருகிறேன்’ என்கிறார். ஹிந்து சமுதாயமே ஒன்றாக இணைந்து அந்த இடத்தில்  சலூனுக்காக புதிய கடை கட்டுகிறது. அடுத்த சில தினங்களில் அங்கு அந்தக்கடை திறக்கப்
படுகிறது. இன்று வரை எந்தப் பிணக்குகளுக்கும் இடமளிக்காமல் ஹிந்துக்களின் ஒற்றுமையின் சின்னமாக, ஸ்வயம்சேவகர்களின் வெற்றிக்கு சான்றாக அந்தக் கடை இன்றும் நிமிர்ந்து நிற்கிறது.

ஒரு பெரிய ஜாதிக் கலவரம் தடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் அப்பகுதி ஸ்வயம்சேவகர்கள். ஸ்வயம்சேவகர்களின் இந்தப் பணியைப் பாராட்டினார் அன்றைய ஜில்லா சங்கசாலக் (ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர்) அமரர் ஆத்மநாத சுவாமி அவர்கள்.

பிப்ரவரி 1996ல் இந்து முன்னணியின் நிறுவனர் இராம. கோபாலன், அப்போதைய தமிழக ஆர்.எஸ்.எஸ் மாநில செயலாளர் மா. ஸ்ரீ வன்னியராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலோடு ஹிந்து சமுதாயப்  பெரியவர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 230 பெரியவர்களை ஸ்வயம்
சேவகர்கள் அழைத்திருந்தார்கள். ஹரிஜன சமுதாயப் பெரியவர்களிடம் நமக்கு செல்வாக்கு இல்லையே என்று அங்கலாய்த்துக்
கொண்டு இருந்த ஸ்வயம்சேவகர்களுக்குப் மட்டிலா மகிழ்ச்சி. காரணம் ஹரிஜன சமூகத்தைச் சார்ந்த பெரியவர்கள் மட்டும் 60 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தார்கள். அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களும் ஹிந்து சமுதாய ஒற்றுமைக்கு முழுமையாகப் பாடுபடுவோம் என்று உறுதி கூறினார்கள்.

ஹிந்து சமுதாயத்தை வெட்டிப் பிளக்க சதிகாரர்கள் செய்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஸ்வயம்சேவகர்களுக்கு பெரிய தெம்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

ஜாதி மோதலுக்கு குறிப்பாக ஹரிஜன், தேவர் சமூகங்களுக்கு இடையே உள்ளே மோதலுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம். அப்போது திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளம் கலவரம் நடந்த சமயம். இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தக் கலவரத்தைப் பரப்பும் நோக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்துக்கொண்டு பரமக்குடியை மையமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தேவிபட்டணத்தை மையமாக வைத்து பழனிபாபா, இராஜசிங்க மங்களத்தை மையமாக வைத்து ஜான் பாண்டியன் ஆகிய மூவரும் திட்டமிட்டு முகாமிட்டு வேலை செய்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 1996ம் ஆண்டு பிப்ரவரியில் சங்கத்தால் (ஆர்.எஸ்.எஸ்) நடத்தப்பட்ட அனைத்து சமூக பெரியவர்களின் கூட்டம் அவர்களது திட்டத்தை முறியடித்ததோடு ஸ்வயம்சேவகர்களுக்குத் தெம்பையும், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

கட்டுரையாளர் :

முன்னாள் தேசிய தலைவர், கோயர்போர்டு

–தொடரும்.