ஜவானுக்கு முதல் சல்யூட்!

இந்திய ராணுவத்தின் முதல் தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் ஜெனரல் கே.எம். கரியப்பா இருந்தார். அவர் வீட்டு பூஜையறையில்  இந்திய ராணுவ வீரர் ஒருவரின் உருவச்சிலை வைத்திருந்தார். அத்துடன் தனது பெற்றோரின் படத்தையும் வைத்திருந்தார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரின் மீது கரியப்பாவிற்கு மிகுந்த பக்தியும் மரியாதையும் இருந்ததனால் அவரது படத்தையும் பூஜையறையில் வைத்திருந்தார்.

தினசரி காலையில் குளித்து முடித்தவுடன் பூஜையறைக்குச் சென்று அந்த ஜவானின் உருவச்சிலைக்கு முன்பு நின்று வணங்குவார். கண்துஞ்சாக் காவலராய், வெயில் குளிர் பாராது உயிரை பணயம் வைத்து எல்லையை அவர்கள் பாதுகாப்பதால்தானே நம்மால் இங்கு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. அதனால் ‘எனது முதல் வணக்கம் ராணுவ ஜவானுக்கே’ என்பார். ஒரு பெரிய ராணுவ அதிகாரி தான் வணங்கும் முதல் தெய்வமாக ஒரு ராணுவ வீரரையே வைத்துக்கொள்வது வித்தியாசமானதுதான்.

இரண்டாவதாக தனது பெற்றோர் படத்தை வணங்குவார். ‘நீங்கள் எனக்கு இந்த உடம்பைக் கொடுத்தீர்கள். நான் இன்று இருக்கும் நிலைக்குத் தகுதி உடையவனாக என்னை உருவாக்கினீர்கள்’ என்று பெற்றோர்களை நினைத்து கண்கலங்கி பிரார்த்திப்பார். அடுத்து தனக்கு ஆன்மிக குருவாக இருந்து வழிகாட்டி வரும் சுவாமி சிவானந்தர் படத்திற்கு முன்பு வணங்குவார். ஜெனரல் கரியப்பாவிற்கு சுவாமிஜியுடன் நல்ல தொடர்பு இருந்தது. சுவாமி சிவானந்தா ஒரு பெரிய தவயோகி, மகான், அவர்மீது கரியப்பாவிற்கு மிகுந்த பக்தி இருந்தது.

 

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்