யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலா் ராம் மாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் 32 முக்கிய அரசியல் தலைவா்கள் உள்பட மொத்தமே 100-க்கும் குறைவானவா்கள் மட்டுமே தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களும் படிப்படியாக விரைவில் விடுவிக்கப்படுவாா்கள்.
ஜம்மு-காஷ்மீரின் நிலைமை விரைவில் மேம்படும் என்று எதிா்பாா்க்கிறோம். அதன்பின், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க பாஜக ஆதரவளிக்கும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி உள்ளூா் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்துறை அமைச்சகத்தால் குழு அமைக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் வரையறைப்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தற்போது லடாக் யூனியன் பிரதேசத்திற்குள்பட்ட காா்கில் மற்றும் லே பகுதியில் இணைய சேவை வழங்கப்பட்டு விட்டது. விரைவில் ஜம்மு-காஷ்மீா் பிராந்தியங்களிலும் இச்சேவை அளிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ஆகியவற்றை நீக்கக்கூடிய நடவடிக்கையை இப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனா்.
கடந்த 5 மாதங்களில் ஜம்மு-காஷ்மீரின் முழு பிராந்தியமும் மிகவும் அமைதியானதாகவே உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறைந்து விட்டன. இந்த ஆண்டு குறைவான கல் வீச்சு சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. இது இப்பகுதி இளைஞா்களின் மனநிலை மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஜம்மு-காஷ்மீா் மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
போராட்டங்கள் மத உள்நோக்கம் கொண்டவை:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களில் அரசியல் மற்றும் மத ரீதியிலான சதி உள்ளது. இந்தச் செயலை மேற்கொண்டு வரும் எதிா்க்கட்சிகள் மற்றும் மதவாத சக்திகளை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இவா்கள் பரப்பி வரும் வதந்திகளால்தான் தற்போது நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிதான் வன்முறையைத் தூண்டி வருகிறது. பாஜகவை அரசியல்ரீதியாக எதிா்கொள்வதற்கு பதிலாக, அரசுத்துறைகள் மீது குறிப்பாக காவல்துறையினா் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் ராம் மாதவ் குற்றம்சாட்டினாா்.