எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விளக்கம் அளிக்க கோரி ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், பவன் கெரா, கே.சி. வேணுகோபால், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ்சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் சில உதவியாளர்களின் செல்போன் தகவல்களை ஒட்டுக்கேட்க முயற்சி நடப்பதாக ஆப்பிள் நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் செய்திகளை அனுப்பியது.
இதையடுத்து, இப்பிரச்சினை குறித்து கவலை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.
சிஇஆர்டி நோட்டீஸ்: இதையடுத்து, மின்னணு மற்றும்தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஆப்பிளின் சாதனங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதையும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில்உள்ள மக்களுக்கு ‘அச்சுறுத்தல் அறிவிப்புகள்’ ஏன் அனுப்பப்பட்டன என்பது குறித்தும் ஆப்பிள் நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்த வார தொடக்தத்தில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசின் இணைய பாதுகாப்பு முகமையான சிஇஆர்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக செயலர்எஸ்.கிருஷ்ணன் நேற்று கூறும்போது, ‘‘எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப் படுவதாக கூறப்பட்ட புகாரின்அடிப்படையில் சிஇஆர்டி தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவார்கள்’’ என்றார்.