‘சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்புகளில், செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு துவங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:
கடந்த, 10 ஆண்டுகளாக பொது மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகள், வணிகங்கள் குறித்த, ‘டேட்டா’க்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. அதனால், செயற்கை நுண்ணறிவு புதிய அவதாரம் எடுத்துள்ளது. உலகம் முழுதும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு விரிவடைந்துள்ளது.
இதை கருத்தில் வைத்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான படிப்புகளும், ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன. பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பை, ஏற்கனவே, ‘ஆன்லைனில்’ நடத்துகிறோம்.
மேலும், மருத்துவம், உற்பத்தி, வேளாண்மை என, எல்லா துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு படிப்பின் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த வரிசையில், வாத்வானி டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளி என்ற, புதிய கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி., வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவரும், அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருபவருமான, டில்லியை சேர்ந்த தொழிலதிபர் சுனில் வாத்வானி, ஐ.ஐ.டி.,க்கு, 110 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவில் உலக அளவில் ஐந்தாம் இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் இருக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
புதிய நிறுவனத்தில், வரும் கல்வியாண்டு முதல், செயற்கை நுண்ணறிவுக்கான, ஏ.ஐ., மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவில், பி.டெக்., படிப்பாக நடத்தப்படும்.
மேலும், எம்.எஸ்., – பிஎச்.டி., – எம்.எஸ்சி., இரட்டை பட்டப்படிப்புகளும், செயற்கை நுண்ணறிவு பள்ளியின் வழியே நடத்தப்படும். அந்த படிப்புக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவு தேர்வு வழியாக, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். முதல் கட்டமாக, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
அதேபோல், எம்.டெக்., படிப்பும் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவில் துவங்கப்படுகிறது. இதற்கு ‘கேட்’ நுழைவு தேர்வு வழியே, 25 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் நாங்கள் பல்வேறு நிறுவனங்களை நடத்துகிறோம். அங்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவில், சமூக முன்னேற்றத்துக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில், சென்னை ஐ.ஐ.டி.,யில் ஏ.ஐ., படிப்புகளை துவங்க, 110 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளேன்.