சென்னை ராயபுரத்தில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 3 நாட்களாக தவித்து வருவதாக, ராயபுரம் மக்கள் நேற்று டிஎச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு பொட்டலங்களை சாலையில் கொட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால், சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் மக்கள், எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். இதேபோல், அயனாவரம், காசிமேடு, ஆலந்தூர், சிந்தாதிரிப்பேட்டை உட்பட சென்னையில் பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், மழை வெள்ள நீரை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்ற கோரியும், மின்சாரம், உணவு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது