சென்னை டாக்டர் சுப்பையா ஏ.பி.வி.பியின் அகில பாரதத் தலைவராகிறார்!

 

தேசத்தின் மிகப்பெரிய மாணவர் பேரமைப்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் அகில பாரத தலைவராக சென்னையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஆஷிஸ் சௌஹான் பொதுச்செயலர் ஆகியுள்ளார். இவர்கள் ஓராண்டு காலத்திற்கு இந்த பொறுப்புகளை வகிப்பார்கள். 2017 நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் வித்யார்த்தி பரிஷத்தின் 63வது தேசிய மாநாட்டின் போது இவர்கள் முறையாக பொறுப்பேற்பார்கள்.

பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பையா தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானேந்தல்  கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி நாட்களிலேயே மாணவர் இயக்கத்தில் தீவிர பங்கேற்றவர். கோவையில் சில ஆண்டுகள் ஏ.பி.வி.பியின் முழுநேர ஊழியராகப் பணி புரிந்திருக்கிறார். இன்று புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணராக விளங்கும் டாக்டர் சுப்பையா எம்.பி.பி.எஸ் முடித்தபிறகு புற்றுநோய் சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை பயிற்சியில் –.இட பட்டம் பெற்றார். தற்போது அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். 1,000 அறுவை சிகிச்சைக்கு மேல் நடத்தியிருக்கிறார். தேசிய, சர்வதேச விஞ்ஞான பத்திரிகைகளில் 27 மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். புற்றுநோய் அறுவை சிகிச்சை என்னும் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவத்தில் 40 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சை தொடர்பான பல்வேறு சங்கங்களில் அவர் தேசிய அளவில் அங்கம் வகிக்கிறார். மாணவர் பருவத்தில் இருந்தே இவருக்கு சமுதாய சேவையில் நாட்டம் உண்டு. கல்வி மேம்பாட்டிலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் தனி ஆர்வம் கொள்பவர். பேராசிரியர் சுப்பையா 1986ல் இருந்து ஏபிவிபியில் பல பொறுப்புகள் வகித்துள்ளார். மாநில தலைவராகவும் தேசிய துணை தலைவராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது அகில பாரத தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேசம் சிம்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷிஸ் சௌஹான். இவர் 2003ல் இருந்து ஏபிவிபியில் தீவிரமாக செயல்படுகிறார். கல்லூரியில் மாணவர் சங்க தலைவராக இருந்து இருக்கிறார். ஏபிவிபியில் படிப்படியாக பல பொறுப்புகளை வகித்தபின் ஆஷிஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.