சென்னையில் ஒரு ஞானசங்கமம்: ‘சரஸ்வதி கோயில்’களுக்கு சரியான திசை காட்ட…

அகில பாரத பிரக்ஞா பிரவாஹ் (சிந்தனை பிரவாகம்) அமைப்பின் தமிழகக் கிளையான தேசிய சிந்தனைக் கழகம், தென்பாரத அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கத்தை, தாம்பரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடத்தியது.

‘தேச வளர்ச்சியில் அறிவுலகின் பங்களிப்பு’ (Role of Intellectuals in Nation Building) என்ற தலைப்பில், 2017, நவம்பர் 18, 19, சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் தேச வளர்ச்சியின் திசையைத் தீர்மானிப்பவர்கள். துரதிருஷ்டவசமாக, நமது நாட்டில் கல்வித் துறையில் நேரிட்டுள்ள தார்மிக வீழ்ச்சியால் நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு எதிரானதாகவே உயர் கல்வி நிறுவனங்கள் மாறி வருகின்றன. உயர்கல்வி அமைப்புகளில் இடதுசாரி அரசியல் சார்புக் கண்ணோட்டத்தால், பண்பாட்டு விழுமியங்களைப் புறக்கணிக்கும் போக்கும், தேசிய ஒற்றுமையைச் சிதைக்கும் காட்சிகளும் தென்படுகின்றன. இந்நிலையை மாற்றுவதும், புதிய இந்தியாவுக்கான இளம் தலைமுறையினரை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும். அதுவே இக்கருத்தரங்கத்தின் இலக்காக இருந்தது.

தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய 6 மாநிலங்களிலிருந்து, 85 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 224 கல்வியாளர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளின் 41 கல்வி நிறுவனங்களிலிருந்து 128 கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேரா. ம.வே.பசுபதி, பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் ஜே.நந்தகுமார், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர் பேரா. இரா.வன்னியராஜன், அகில பாரத இணை பொதுச்செயலாளர் முனைவர் கிருஷ்ண கோபால், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் கருத்தரங்க வரவேற்புக் குழுவின் தலைவருமான பேரா. ஏ.கலாநிதி, பாரதீய சிக்ஷண் மண்டலியின் அகில பாரத அமைப்பாளர் முகுல் கானிட்கர், மொழியியல் ஆராச்சியாளர் சங்கராந்த் சாணு, சரஸ்வதி நதி நாகரிக ஆராச்சியாளர் முனைவர் எஸ்.கல்யாணராமன், சின்மயா மிஷன் துறவி சுவாமி மித்ரானந்தர், துக்ளக் வார இதழின் ஆசிரியர் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, கல்வியாளர் தங்கம் மேகநாதன், தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் தலைவர் வி.பி.ராமமூர்த்தி, சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியரும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான பேரா. ப.கனகசபாபதி ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு வழிகாட்டினர்.

கல்வி நிறுவனங்களில் பிரிவினைச் சிந்தனைகளை களையவும், தேசபக்தியும் தலைமைப் பண்பும் மிகுந்த மாணவர்களை உருவாக்கவும் கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.