சென்னை – சிங்கப்பூர் – தாய்லாந்துக்கு சர்குலர் சுற்றுலா கப்பல் இயக்க திட்டம்

சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து சென்று, மீண்டும் சென்னைக்கே திரும்பும் வகையில், ‘சர்குலர்’ சுற்றுலா சொகுசு கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டம் வாயிலாக, கடல்சார் துறையை மேம்படுத்தும் வகையில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மும்பையில் நடந்த இந்திய கடல்சார் மூன்றாவது உச்சி மாநாட்டில், இந்திய கப்பல் போக்குவரத்து மேம்பாடு மற்றும் துறைமுகங்கள் மேம்படுத்துவது குறித்து, ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னை துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில், ஏராளமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது  தமிழகத்தில், சென்னை துறைமுகம், வ.உ.சி., துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், கப்பல் போக்குவரத்து துறையில், அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தவும் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அதிகரிக்கவும், சுற்றுலா பயணியரை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

பயணியர் கப்பலை காட்டிலும், சுற்றுலா கப்பலை இயக்க, பல்வேறு தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து, அந்தமான் சென்று மீண்டும் சென்னைக்கு வரும் வகையில், சர்குலர் சுற்றுலா சொகுசு கப்பல் திட்டத்தை செயல்படுத்த, எம்.எஸ்.சி., எனப்படும் மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனி திட்டமிட்டுள்ளது.

 

இதற்கான செயல்திட்டம் இறுதியானதும், திட்டம் துவக்க தேதி அறிவிக்கப்படும். ஒரே நேரத்தில், 2,000 பேர் வரை பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் இருக்கும். சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேஷியா வழியாக இலங்கைக்கு மற்றொரு சுற்றுலா சொகுசு கப்பல் இயக்க உள்ளோம். இதற்கான, ஆரம்ப கட்ட பேச்சு விரைவில் துவங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.