பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்து, சென்னை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார். இவர், 2014ல், அம்பத்துார் எஸ்டேட் அருகே, மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன், 2020ல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, இந்த கொலைகளுக்கு, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி காஜா மொய்தீன், 55, மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில், காஜா மொய்தீன், வெளிநாட்டினரிடமும், இங்குள்ள ஆதரவு தொழில் அதிபர்களிடமும் நிதி திரட்டி, தமிழகத்தில் பல ஏக்கர் நிலம் வாங்கி, தனி வளாகம் அமைத்து, அங்கு தங்களை ஆதரிக்கும் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த போலீசார், அடுத்தடுத்த விசாரணைகளில் காஜா மொய்தீனின் திரைமறைவு திட்டங்கள் அறிந்து உஷாராயினர். இதற்கிடையே, காஜா மொய்தீன் தலைமையிலான கும்பல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, தனியார் பஸ்சில், துப்பாக்கி பார்சல்களை, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்தியுள்ளது. இது தொடர்பாக, காஜா மொய்தீன் கூட்டாளி மெகபூப் பாஷா கைதானார். பின், டில்லியில் காஜா மொய்தீன் கைதானார்.
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர், சென்னை சிறைக்கு மாற்றப்பட்டார். தற்போது சிறையில் இருந்தபடி, காஜா மொய்தீன் தன் கூட்டாளிகளை இயக்கி வருகிறார். அவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.