சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில், ‘செங்கோல் மறுமலர்ச்சி விழா’ நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் பேசியதாவது: தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், நீதியின் சின்னமாக செங்கோலை வைத்திருந்தனர். அரசன் நீதி தவறும்போது செங்கோல் சாய்ந்து விட்டது எனக்கூறினர். மதுரையில் நீதி தவறியதை அறிந்த பாண்டியன் தன் உயிர் துறந்து செங்கோலை காத்தான்.
செங்கோல் பற்றி தொல்காப்பியம் துவங்கி, பக்தி இலக்கியங்கள் வரை பல்வேறு இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. வள்ளலாரும் இறைவன் அளித்த செங்கோலாக தன் சுத்த சன்மார்க்க சங்கத்தை குறிப்பிடுகிறார். தமிழன்னையின் அணிகலன்களாக சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிடும் நிலையில், அவளின் செங்கோலாக திருக்குறள் குறிப்பிடப்படுகிறது. திருக்குறளில் மனைமாட்சி, செங்கோண்மை எனும் அதிகாரங்கள் மன்னனின் இயல்புகள், அவன் கடைபிடிக்க வேண்டிய நெறிகள், அவன் ஆட்சியில் செய்ய வேண்டியகடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி, உலகின் பல அரசர்களும் நீதியைக் காக்க, வேறு பெயர்களில் கோலை வைத்திருந்தனர். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்திலும், நீதியைப் பற்றிய பதிவுகள் உள்ளன. மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப்பின், சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன.
அத்தகைய செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப்பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், மீண்டும் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோலை வைத்துள்ளனர். அவ்வாறு வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை, ‘செங்கோல் மறுமலர்ச்சி நாள்’ ஆக கொண்டாடுகின்றனர். இது, தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ‘துக்ளக்’ இதழ் ஆசிரியர் குருமூர்த்தி, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ரசிக ரஞ்சனி சபா தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலர் நடராஜன், சொற்பொழிவாளர்கள் டி.கே.ஹரி, ஹேமா ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.