“சிந்தனை ஒன்றை எடுத்துக்கொள்; அதையே நீ இரவு பகலாக நினைத்துக் கொண்டிருக்கை
யில் அது வலிமை பெற்றதாகி விடும். நீ மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு குகையில் வாழ்ந்து இறந்தாலும் சரி; உன்னுடைய எண்ணங்கள் இறக்காது. அது அந்த குகையையும் தாண்டி பயணிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் அது மக்கள் மனங்களை கவர்ந்து செயல் வடிவம் பெற ஆரம்பிக்கும்!” என்று எண்ணங்களின் ஆற்றலை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு சாதாரண மனிதனின் சிந்தனையே இவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுவாமிஜியின் எண்ணத்தின் சக்தியை என்னவென்று சொல்வது? மேலும் அவர் மஹாசமாதி அடையும் முன்பு இரண்டு அபய வாக்குகளை நமது தேசத்திற்கு அருளினார்
- அடுத்த 1,500 ஆண்டுகளுக்கு தேவையான சிந்தனை செல்வத்தை நான் உங்களுக்கு அளித்திருக்கிறேன். இதன் துணைகொண்டு நீங்கள் செயல் புரிய ஆரம்பியுங்கள்.
- தேவைப்படும் போதெல்லாம் ஆயிரமாயிரம் விவேகானந்தர்கள் இங்கு தோன்றுவார்கள் ஏன்? ஸ்வாமிஜியின் மானஸ புத்திரனே ஹெட்கேவார் என்று கூட கூறலாம்.
சுவாமிஜி தனது எண்ணத்தை ஒரு பீஜமாக விதையாக கொடுத்தார். அதனை கிரஹித்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் டாக்டர்ஜி, அதற்கு செயல் வடிவம் கொடுத்து, மெருகேற்றி ஒரு 100 ஆண்டுகள் கடந்து நிற்கும் ஆலமரமாகவே மாற்றிவிட்டார்!
சமூக சேவையே முக்திக்கான வழி
சுவாமிஜி ஒரு பிரம்ம ஞானி. நமக்கும் நமது நாட்டிற்கும் எது நன்மை பயக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அவர் கர்ம யோகத்தினை மிகவும் போதித்தார் சங்கத்தின் கொள்கையும் சுவாமிஜியின் முடிவும் “சமுதாய வாழ்வே முக்திக்கான வழி என்பதாகும்’’.
ஆகையால்தான் புயல் , வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வரும் காலத்திலும் கல்வி, கிராம மேம்பாடு போன்ற தேசத்திற்கு அத்தியா
வசியமான துறைகளிலும் சங்கம் தனது ஒப்பற்ற வேள்வியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
சமுதாய எழுச்சி
சுதந்திர காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் சுதந்திரம் கிடைக்கும் முன்பாகவே அவை மறைந்து விட்டன. காரணம் ஒன்றை எதிர்ப்பதற்காக உருவாக்கப்படும் இயக்கங்கள் எல்லாம் நாளடைவில் வீரியம் குறைந்து போய் இல்லாமல் போகிறது . ஒரு கருத்தியலுக்கு எதிராகவே ஒரு கருத்து உருவாக்கப்படும் போது கால ஓட்டத்தில் அது ஜீரணிக்கப்பட்டு அந்த கருத்து இல்லாமலேயே போகிறது.
சுவாமிஜியின் வாழ்க்கையை இங்கு நினைவு கூர்வோம். அவர் பரிவ்ராஜகராக பாரத நாடு முழுவதும் வலம் வந்தார். அப்போது வரியவர், நலிந்தவர்களின் நிலைமையை கண்டு வாடினார். அவர்களுக்கு எதிராக ஜாதி கொடுமைகளும் அரங்கேறின ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அவர் பதில் கொடுப்பதிலோ எதிர்ப்பதிலோ நேரம் செலவிடாமல் அதன் மூலத்தை ஆராய்ந்தார்.
தீர்வு நமது தேசத்தின் நீரோட்டத்தில் சாமானியர்கள் ஒதுக்கப்பட கூடாது என்று வலியுறுத்தினார். சங்கத்தில் சாமானியர்களை வைத்தே தேசிய சக்கரத்தை நகர்த்த முடியும் என்று நம்பினார் டாக்டர்ஜி. சங்கத்தின் எல்லா துறைகளிலும் சாமான்ய தொண்டர்களின் ஆர்வம் மூலமே பணிகள் நடைபெறுகின்றன.
தனிமனிதனின் மாற்றமே சமுதாய மாற்றம்
“நீங்கள் அரசியலைப் பற்றி பேசுகிறீர்கள், சட்டம் இயற்றுவதை பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் மனிதர்கள் எங்கே? நீங்கள் இதில் கவனம் செலுத்துங்கள் நானோ நல்ல மனிதர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப் போகிறேன்” -என்று சுவாமி விவேகானந்தர் தனது செயல் களத்தை விளக்குகிறார். அந்த காலக்கட்டத்தில் சுவாமிஜியின் இந்த கருத்து அப்போதிருந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை என்றே புரட்சி பேசும் பலர் கருதினர். வேறு சிலரோ புதிதாக
அமைப்புகளை உருவாக்கி பிரிட்டிஷாருக்கு எதிராக அறிக்கைகள் தயாரிப்பது அல்லது மனு அளிப்பது மற்றும் மக்கள் தங்களை உற்று நோக்க வேண்டும் என்பதற்காகவே வெறும் அந்தஸ்துக்காக சிறை சென்று வருவது என்றே அன்றைய போக்கு இருந்தது.
டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் வாழ்க்கையில் இதை பிரதிபலிக்கும் முக்கியமான ஒரு சம்பவம் ……
நீதிபதி ஸ்மெலி, டாக்டர் ஹெட்கேவாருக்கு ஒரு வருட காலம் கடுங்காவல் தண்டனை அளித்தார். நீதிமன்றத்தின் வெளியே வந்ததும்,
‘‘டாக்டர்ஜிக்கு ஜே’’ என்று காங்கிரஸ்காரர்கள் முழங்கினார்கள். அப்போது கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் டாக்டர்ஜி இவ்வாறு கூறினார், ” தாய் நாட்டை பாதுகாக்க சிறை செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் சிறை செல்வதே மோட்சம் என்று நினைத்து விடக்கூடாது . அதுதான் தேசத்திற்கான சேவை என்கிற பிரமையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்.
சுதந்திர பணி புரிந்து கொண்டு சிறை செல்ல நேரிட்டால் அவசியம் செல்லுங்கள். ஆனால் நமது லட்சியம் சிறை செல்வதல்ல மாறாக வெளியில் இருந்து கொண்டே மக்கள் மத்தியில் தேசத்திற்கு சேவை செய்து நல்ல நபர்களை உருவாக்குவது.” என்று கூறினார். அப்போது காங்கிரஸில் இருந்த பெரும் தலைவர்கள் பலருக்கும் டாக்டர்ஜியின் இந்த பேச்சு புரியாத புதிராகவே இருந்தது.
பிற்காலத்தில் ‘‘ஷாகா’’ என்னும் மந்திரத்தின் மூலம் ஸ்வயம்சேவக்காக மற்றும் ஒரு ரசவாத வித்தையை அரங்கேற்றிக் காட்டினார் டாக்டர்ஜி.
தனிமனித விருப்பம் முக்கியமே
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆரம்பிக்கப்பட்ட காலம் அது. தங்களது அன்றாட வாழ்விற்கே மிகவும் சிரமப்பட்ட காலம். இதன் கஷ்டத்தை உணர்ந்து பலர் துறவு வாழ்க்கை வேண்டாம் என்று கூறி வீடு செல்ல நினைக்கும் போது, சுவாமிஜி அவர்களை தேற்றினார். எடுத்துக் கொண்ட கொள்கையில் என்றும் பின்வாங்க கூடாது என்று அறிவுறுத்தினார். இவ்வளவு அமளி துமளி நடந்து கொண்டிருக்கும் போதும் இவை எதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் ஒரு சீடர் இருந்தார் அவரது பெயர் சுவாமி அபேதானந்தர். அவர் தத்துவ ஆராய்ச்சியிலும் சாஸ்திரம் படிப்பதில் மட்டுமே ஈடுபட்டிருந்தார். சமையல் செய்வது, ஆஸ்ரமத்தை சுத்தம் செய்வது, யாரெனும் நோய்வாய்ப்பட்டால் கூட எந்த உதவியும் செய்ய மாட்டார். மற்ற சிஷ்யர்கள் அவரை ஒரு பாரமாக கருதினர்.
பின்னாட்களில் சீடர்களின் மத்தியில் ஒரு சண்டையாகவே இது மாறிற்று. விஷயம் சுவாமிஜி முன்பு வந்தது. எல்லோரும் ஸ்வாமிஜி அவரை கடுமையாக திட்டுவார் என்றே நினைத்தனர். ஆனால் ஸ்வாமிஜியோ “ஏன் இவ்வாறு அவனை பேசுகிறீர்கள் ? எல்லோருக்கும் ஒரு தனித்திறமை என்ற ஒன்று உண்டு. பெரும்பாலானோர் போக்கிற்கு ஒருவன் வரவில்லை என்றால் அவனை இவ்வாறு அவமானப்படுத்துவத்துவது என்பது குழந்தை தனமான செயல். நம்மில் அவனைப் போன்ற ஒரு பண்டிதன் உருவானால் அது நமக்கு எல்லாம் பெருமைதானே’’ என்று கூறி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுவாமிஜி. அவர் சொன்னது போலவே அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள அறிஞர்கள் போற்றும் மிகப்பெரிய பண்டிதராக சுவாமி அபேதானந்தர் பிற்காலத்தில் மலர்ந்தார்.
சங்கத்திலும் தனிமனித திறமையை அடையாளம் காட்டுவதிலும், அதனை மெருகேற்றி சமுதாயம் பயனுறும் வகையில் செயல் புரிய வைப்பதிலும் சங்கத்தின் விவித ஷேத்ரங்கள் இன்றும் பணியாற்றி வருகிறது. நோக்கமெல்லாம் எவ்வழியாகிலும் தேசத்திற்கு தொண்டாற்றுவதே! இவ்வாறு பல்வேறு கோணங்களில் ஆராயும்போது ஞானப் பிதாவும் இங்கே அவரது தவப்புதல்வன் ஒரே சிந்தனை ஓட்டத்தில் பயணிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!
ஸ்வாமிஜியின் சீடர் ஹெட்கேவார் என்றால் ஹெட்கேவார் கண்ட முதல் ஸ்வயம்சேவக் ஸ்வாமிஜி என்றும் கூறலாம்!