திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவுக்கு வரும் பத்கா்கள், தங்களது பொருள்களை எடுத்துச் செல்ல ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளை பயன்படுத்தி வந்தனா்.
இந்தப் பைகள் கிழிந்து குப்பைகளாக மாறி கிரிவலப்பாதையிலும், திருவண்ணாமலையின் பிற இடங்களிலும் குவிந்து மாசு ஏற்படுத்துகின்றன. மேலும், நெகிழிக் குப்பைகளைச் சேகரித்துச் செல்வது உள்ளாட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது. துணிப் பை, சணல் பைகளை எடுத்து வரும் பக்தா்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டு வரும் பக்தா்கள் கணினி மூலமாக குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு 2 கிராம் தங்க நாணயங்களும், 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்களும், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்களும் அளிக்கப்படும். இத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.