சுந்தர் பிச்சையை பாராட்டிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது இந்தியாவின் மின்னணுவியல் சூழலை விரிவுபடுத்துவதில் பங்கேற்கும் கூகுளின் திட்டம் குறித்து அவர் விவாதித்தார். கூகுள் அதன் ‘குரோம்புக்’ லேப்டாப்களை எச்.பி., நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் தயாரிப்பதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலிகளை, இந்திய மொழிகளில் உருவாக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

குஜராத்தின் ‘கிப்ட்’ சிட்டியில், உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தை திறக்கும் கூகுளின் முயற்சியை பிரதமர் வரவேற்றார்.வரும் டிசம்பர் மாதம் புதுடில்லியில், இந்தியா நடத்தவுள்ள உலகளவிய செயற்கை நுண்ணறிவியல் உச்சி மாநாட்டில், கூகுள் நிறுவனமும் பங்கேற்கபிரதமர் அழைப்பு விடுத்தார். கூகுள் பே மற்றும் யு.பி.ஐ., வாயிலாக, இந்தியாவில் நிதிச் சேர்க்கையை மேம்படுத்த, கூகுளின் திட்டங்களைப் பற்றி சுந்தர் பிச்சை அப்போது எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பங்களிப்பதற்கான கூகுளின் உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.