சுத்தானந்த பாரதி

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்டவரும், பன்மொழிப் புலவரும், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவருமான சுத்தானந்த பாரதி ,சிவகங்கையில் 1987ல்  பிறந்தார். தன் தந்தை வேதங்களைக் கற்றார். பின்னர் திண்ணைப் பள்ளி, மன்னர் பள்ளியில் படித்தார். எட்டாம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலும் ஆன்மிக விழிப்புணர்வும் இவருக்கு ஏற்பட்டது. இமயமலையில் வாழ்ந்துவந்த சித்தர் ஒருவர் இவருக்கு ‘சுத்தானந்தம்’ என்று பெயரிட்டு தீட்சை வழங்கினார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வேதம், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றைக் கற்று அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘பாரத சக்தி’ என்னும் காவியத்தைப் பாடத் தொடங்கினார்.

பல மொழிகளைக் கற்றறிந்த இவர், திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியர் இவருக்கு ‘கவியோகி,’ ‘பாரதி’ என்றும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர். திலகர், காந்திஜி, நேதாஜி, உ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். கிராமப் பணி, கதர்ப்பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மறுவாழ்வு ஆகிய சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். அரவிந்தரின் தொடர்பால் இவரது வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

புதுவை ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மவுன விரதம் இருந்தர். சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்கள் இயற்றியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார்.

சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சொற்பொழிவாற்றினார். ‘அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல் இவை இரண்டும் இணைந்தால், மனித வாழ்வு அமரத்துவம் பெறும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்’ என்பதுதான் இவர் உலகுக்கு அளித்த செய்தி. 1977ல் சிவகங்கையில் ‘சுத்தானந்த யோக சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார். 1979ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியை நிறுவி அங்கேயே ஒரு குடிலையும் அமைத்துக்கொண்டு சமாஜம், பள்ளியின் வளர்ச்சிக்கு வழிகாட்டினார். தன் படைப்புகளுக்கு வந்த பணத்தை சமாஜப் பணிகளுக்கே செலவிட்டார். 1990ல் தனது 93வது வயதில் மகாசமாதி அடைந்தார்.