அது 1948. காஷ்மீரத்தில் நிலைமை மோசமாவது கண்டு கரியப்பா தில்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போதைய பிரிட் டிஷ் ராணுவத் தளபதி சர் ராய் புட்சர் கலவரத்தை அடக்கவேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டு இங்கிலாந்து போய்விட்டார். ராணுவத் தலைமையகத்தில் கரியப்பாவுக்கு ஒரு படைப்பிரிவு கொடுத்தால் போதும் என்றும் முடிந்தவரை கலவரத்தை அடக்கட்டும் என்றும் எழுதி வைத்திருந்தார் புட்சர்.
புட்சரின் ஆணையை மீறி தம் நம்பிக்கைக்குரிய லெஃப்டினன்ட் ஜெனரல் திம்மையா, லெஃப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீநாகேஷ், கர்னல் மானெக்ஷா, ஆத்மா சிங் ஆகியோரைக் கொண்டு படைகளைக் காஷ்மீரத்துக்கு அனுப்பி எதிரிகளின் வியூகங்களைச் சிதறடித்து காஷ்மீரத்தைக் கைப்பற்றினார் கரியப்பா. ஆனால் வென்ற இடங்களை வைத்துக் கொள்ளாமல் நேரு ஐநா சபையில் போய் நின்றதை அவர் ஏற்கவில்லை. கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் குறிப்புகள் எழுதி ராணுவச் செயலருக்கு அனுப்பினார்.
ராய் புட்சரின் பதவிக்காலம் முடிந்த போது அடுத்த தளபதி யார் என்ற கேள்வி எழுந்தது. நம் தளபதிகளுக்கு ராணுவத் தலைமைக்கு அனுபவமில்லை ஆகவே வேறொரு ஆங்கிலேயரைக் கேட்டுப் பெறலாம் என்று நேரு சொன்னார். பிரதமர் பதவிக்கும் நமக்கு அனுபவ மில்லை, அதற்கும் ஆங்கிலேயர்கள் வரலாமா என்று ராணுவச் செயலகத்தில் பணியாற்றிய லெஃப்டினண்ட் ஜெனரல் நாதுசிங் கேள்வி எழுப்பினார். ராணுவ அமைச்சர் பல்தேவ்சிங், பிரதமர் நேரு, கிருஷ்ணமேனன், ஓய்வு பெறும் தளபதி ராய் புட்சர் ஆகியோர் தீவிர எதிர்ப்புக்கு இடையே கவர்னர் ஜெனரல் ராஜாஜி, துணைப்பிரதமர் வல்லபாய் படேல், சக ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆதரவுடன் கரியப்பா
இந்திய தரைப்படையின் முதல் இந்தியத் தளபதி ஆனார்.
கரியப்பா பதவியேற்ற நாள் 1949 ஜனவரி 15. அந்த நாள் தேசிய தரைப்படை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மாணவப் படையான என்.சி.சி கரியப்பா
வால் தொடங்கப்பட்டது. நேதாஜியின் ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தை இந்திய ராணுவத்தின் கோஷமாக கரியப்பா முன்வைத்தார். ராணுவத்
தில் அரசியல் தலையீட்டை அறவே தடுத்தார் கரியப்பா.
இவர் ஓய்வுக் காலத்தை தம் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மடிக்கேரியில் கழித்தார். அப்போது 1965ல் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்க இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அடித்தது. இவரது மகன் நந்தா கரியப்பா இந்திய விமானப்படையில் விமானியாக இருந்தார். பாகிஸ்தானில் குண்டு வீசிய நந்தாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு நந்தா பிடிபட்டார். இதைக் கேட்டதும் ‘சரி, சண்டைக்குப் போனான். பிடிபட்டான்.’ என்று சொல்லிவிட்டார் கரியப்பா.
அப்போது அவரது வீட்டுக்கு ஒரு சர்வதேச அழைப்பு வந்தது. ராணுவத் தலைமையகத்தில் இருந்து கூப்பிட்டு, ”பாகிஸ்தான் அதிபர் உங்களிடம் வேலை செய்தவராம், ஏதோ பேசவேண்டுமாம்” என்றார்கள். கரியப்பாவிடம் பேசிய அயூப்கான் “கமாண்டர்! உங்கள் மகன் இங்கே போர்க் கைதியாக இருப்பதாக அறிந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். அவரை இப்போது என் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள படைப் பிரிவுக்கு மாற்ற உத்தரவு கொடுத்துள்ளேன். அவரை ஒரு குறையில்லாமல் கவனித்துக் கொள்கிறேன். விரைவில் அவரை விடுதலை செய்து அனுப்பிவிடுகிறேன்.” என்றார்.
குரலை உயர்த்தி, ”முட்டாளே! அவன் என் மகன் இல்லை. இந்தியத் தாயின் மகன்களில் ஒருவன். நீ சிறப்புச் சலுகை எதுவும் காட்டவேண்டாம். என்னிடம் பெற்ற பயிற்சிக்கு மரியாதை செய்ய விரும்பினாய் என்றால் அவனை விதிமுறைகளின் படி நடத்து. விடுதலை செய்ய விரும்பினால் பிடிபட்ட அத்தனை வீரர்களையும் விடுதலை செய். இல்லாவிட்டால் யாரையும் விடுவிக்க வேண்டாம். உன் கட்டுப்பாட்டில் உள்ள படையானாலும் எதுவானாலும் எவனுக்கும் எந்தச் சிறப்புச் சலுகையும் அளிக்காதே. ஒரு ராணுவத் தளபதி போலப் பேசு. உணர்ச்சி வசப்படும் முட்டாள் மாதிரி நடந்துகொள்ளாதே!” என்று பொரிந்து தள்ளிவிட்டார் கரியப்பா.
அரண்டு போன அயூப்கான் மன்னிப்புக் கேட்டு ஃபோனை வைத்தார். பேச்சுவார்த்
தைக்குப் பிறகு மற்ற கைதிகளோடு நந்தாவும் விடுவிக்கப்பட்டு பணியில் மீண்டும் சேர்ந்தார். இந்திய விமானப் படையின் தளபதி ஆகி ஓய்வும் பெற்றார்.