ஆகஸ்டு 15. பாரத சுதந்திர தினம் வருகிறது. உடனே சங்க ஆதரவாளர் எவருக்கும் “சுதந்திரப் போராட்டத்திற்கு நமது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) செய்த பங்களிப்பு என்ன?” என்ற கேள்வி மனதில் எழுவது உண்டு. அந்தக் கேள்விக்கு விடையாக சங்கத்தின் இணைப் பொதுச் செயலர் டாக்டர் மன்மோகன் வைத்ய வழங்கியுள்ள ஒரு கட்டுரை அமைகிறது. படியுங்கள்.
ஒரு பத்திரிகையாளர் என்னைச் சந்தித்த போது ‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். நான் ஒரு எதிர்க் கேள்வியாக ‘நீங்கள் சுதந்திர இயக்கத்தில் யாரை நம்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். மகாத்மா காந்தி என்றார். சுதந்திரப் போராட்டத்தில் மும்மூர்த்திகளான லால், பால், பால் ஆகியோரின் பங்களிப்பு? நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்கு? என்று கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார்.
காந்திஜி தலைமையில் எத்தனை சத்தியாகிரகங்கள் நடந்தன என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. ‘1921, 1930, 1942 என மூன்று நடந்தது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் 1921, 1930ம் ஆண்டுகளில் நடந்த சத்தியாகிரகங்களில் கலந்து கொண்டார். இரண்டு முறை சிறைவாசம் அனுபவித்தார். மூன்றாவது சத்தியாகிரகம் நடைபெறுவதற்கு முன்பு 1940ல் அவர் காலமாகிவிட்டார்’ என்று தெரிவித்தேன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்களிப்பு பற்றி பேச வேண்டுமானால், டாக்டர் ஹெட்கேவாருடன் தொடங்க வேண்டும். கேசவ பலிராம் ஹெட்கேவார் 1889ல் நாக்பூரில் பிறந்தார். சுதந்திர இயக்கம் பற்றிய விவாதம் அங்கு 1904-–1905 வாக்கில் தொடங்கியது. 1897ல் விக்டோரியா மகாராணியின் பதவியேற்பு வைர விழா
விற்காக, பள்ளியில் வழங்கப்பட்ட இனிப்புகளை, 8 வயது சிறுவன் கேசவ் சாப்பிடாமல், குப்பையில் வீசினான் என்பது வரலாறு. 1907-ல் ரிஸ்லி சுற்றறிக்கை ‘வந்தே மாதரம்’ முழக்கத்தை தடை செய்தது. அநீதியான அந்த உத்தரவை எதிர்த்து, கேசவ் தனது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் திரட்டி அரசு ஆய்வாளர் முன் ‘வந்தே மாதரம்’ முழக்கம் செய்தார். அதற்கு தண்டனையாக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். மும்பையில் மருத்துவப் படிப்புக்கான வசதிகள் இருந்தபோதிலும், புரட்சியாளர்களின் மையமாக இருந்த கல்கத்தா சென்றார். அங்கு அவர் புரட்சியாளர்களின் அமைப்பான ‘அனுசீலன் சமிதி’யின் நம்பகமான உறுப்பினரானார்.
மருத்துவராகி 1916ல் நாக்பூர் திரும்பினார். அந்த நேரத்தில் சுதந்திர இயக்கத்தின் பிரபல தலைவர்கள் அனைவரும் திருமணமானவர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டுக்குத் தேவையான வருமானமும் இருந்தது. இதனுடன் சுதந்திரப் போராட்டத்திலும் தங்களின் பங்களிப்பைச் செய்து வந்தனர். ஆனால் டாக்டர் ஹெட்கேவார் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார். அவர் மனதில் அவ்வளவு தீவிரம் இருந்தது. தனது பலம், நேரம், திறன் அனைத்தையும் தேசத்திற்காக அர்ப்பணித்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை சிறிதும் சிந்திக்காமல், சுதந்திரத்திற்கான அனைத்து வகையான இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
லோகமான்ய திலகர் மீது அவருக்கு அபார நம்பிக்கை இருந்தது. 1920ல் நாக்பூரில் திலகர் தலைமையில் நடைபெற
இருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளின் பொறுப்பும் டாக்டர் ஹர்தீகர், டாக்டர் ஹெட்கேவார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக அவர்கள் 1,200 தொண்டர்களை திரட்டினர். அப்போது டாக்டர் ஹெட்கேவார் காங்கிரஸின் நாக்பூர் நகரப் பிரிவு இணைச் செயலாளராக இருந்தார். அந்த மாநாட்டில் நிறைவேற்ற, ‘பாரதத்தை முழுவதுமாக சுதந்திரமாக்கி, முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதன் மூலம் பாரதிய குடியரசை நிறுவுவது காங்கிரஸின் நோக்கம் என அறிவிக்க வேண்டும்’ என்பதாக காங்கிரஸின் தீர்மானக் குழுவின் முன் ஒரு தீர்மானத்தை டாக்டர் ஹெட்கேவார் பரிந்துரைத்தார்.
அவரது முழுமையான சுதந்திரம் பற்றிய பரிந்துரை
அந்த நேரத்தில் கவனிக்கப்படாமல் போனது, ஆனால் அது 9 ஆண்டுகளுக்குப் பிறகு 1929 லாகூர் மாநாட்டில் காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த டாக்டர் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ் அனைத்து கிளைகளுக்கும் (ஷாகா) காங்கிரஸை வாழ்த்துவோம் என சுற்றறிக்கை அனுப்பினார். திலகர் மறைவுக்குப் பின் மகாத்மா காந்தியின் தலைமையில் காங்கிரஸின் சுதந்திர இயக்கம் தொடங்கியது.
ஒத்துழையாமை இயக்கத்தின் போது, 1921ல், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர இயக்கத்துடன் முஸ்லிம்களின் மனதை இணைக்க (பிரிட்டன் துருக்கிஸ்தானில் கலீபா ஆட்சியை ரத்து செய்ததை எதிர்த்து நடந்த) கிலாபத்தை காந்திஜி ஆதரித்தார். இதற்கு பல காங்கிரஸ் தலைவர்களும் தேசியவாத முஸ்லிம்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, திலகர் ஆதரவாளர்களின் கோட்டையாக இருந்த நாக்பூரில் ஒத்துழையாமை இயக்கம் மிகவும் பயனுள்ளதாக இல்லை.
ஆனால் டாக்டர் ஹெட்கேவார், டாக்டர் சோல்கர், சமிமுல்லா
கான் போன்றவர்கள் இந்த சூழலை மாற்றினார்கள். ஹெட்கேவார் மீதான ராஜத்துரோக வழக்கில் அவர் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்தது. 1921 ஆகஸ்ட் 19 முதல் 1922 ஜூலை 11 வரை சிறையில் இருந்த அவர் விடுதலையான பிறகு, ஜூலை 12 அன்று நாக்பூரில் ஒரு வரவேற்புப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர் ஹெட்கேவாரை வரவேற்க, காங்கிரஸின் தேசியத் தலைவர்கள், ஹக்கீம் அஜ்மல் கான், பண்டிட் மோதிலால் நேரு, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல் போன்றோர் வந்திருந்தனர்.
சுதந்திரத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் புரிந்துகொண்ட போதிலும், 7,000 மைல்களுக்கு அப்பால் இருந்து வர்த்தகம் செய்ய வந்த ஒரு சில ஆங்கிலேயர்கள் எப்படி இந்த பரந்த நாட்டை ஆளத் தொடங்கினர் என்ற கேள்வி டாக்டர் ஹெட்கேவார் உள்ளத்தில் தொடர்ந்து வியாபித்தது. நமது சமுதாயம், சுய மறதி, ஜாதி, மாகாண, மொழி, வழிபாட்டு முறை என பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒழுங்கமைக்கப்படாமல், பல தீமைகள் நிரம்பியிருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி பிடித்திருக்கலாம் என்பதை உணர்ந்தார்.
சுதந்திரம் கிடைத்த பிறகும் சமுதாயம் அப்படியே இருந்தால் நாளை அதே வரலாறு மீண்டும் நிகழும். ‘ராமசாமி போய் கிருஷ்ணசாமி வருவார்’ என்ற கதையாகி விடும். எனவே, நமது தேசிய சமுதாயத்தை எல்லாக் குறைபாடுகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் விடுவித்து, தேசிய குணங்கள் நிறைந்ததாக ஆக்குவது மிகவும் அடிப்படையான பணி என்று அவருக்குத் தோன்றியது, இந்த பணி நீடித்து, செய்யப்பட வேண்டும். அரசியலில் இருந்து விலகி, பெயர் புகழிலிருந்து விலகி, அமைதியாக நடைபெற வேண்டிய பணி இது.
ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபிக்கப்பட்ட பிறகும், அவர் அனைத்து அரசியல், சமூகத் தலைவர்கள், செயல்பாடுகளுடன் சீரான, நெருக்கமான உறவு கொண்டிருந்தார். காந்திஜியின் அழைப்பின் பேரில், தண்டியில் (குஜராத்) உப்பு சத்தியாகிரகத்தின் வடிவத்தில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. நவம்பர் 1929ல், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் மூன்று நாள் கூட்டத்தில், இந்த இயக்கத்தை நிபந்தனையின்றி ஆதரிக்க சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
சங்கத்தின் கொள்கையின்படி, டாக்டர் ஹெட்கேவார் தனிப்பட்ட முறையில் மற்ற தன்னார்வலர்களுடன் இந்த சத்தியாகிரகத்தில் பங்கேற்க முடிவு செய்தார். மேலும் சங்கப் பணிகள் தடையின்றி தொடர, ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் பொறுப்பை தனது பழைய நண்பர் டாக்டர் பராஞ்சபேவிடம் ஒப்படைத்தார். சுற்றுப் பயணங்கள் பொறுப்பை பாபா சாகேப் ஆப்தே, பாபு ராவ் பேடியிடம் வழங்கினார். ஆரம்பத்தில் இந்த சத்யாகிரகத்தில் அவருடன் 3-4 ஆயிரம் பேர் இருந்தனர். வார்தா, யவத்மால் வழியாக புசாத்தை அடைந்ததும், சத்யாகிரகம் நடந்த இடத்தில் 10,000 பேர் கூடினர். இந்த சத்யாகிரகத்தில் கைதாகி ஹெட்கேவார் 9 மாதம் சிறையில் இருந்தார்.
விடுதலையாகி மீண்டும் சர்சங்கசாலக் பொறுப்பை ஏற்று மீண்டும் சங்கப் பணியில் ஈடுபட்டார். 1938ல், ஹிந்துக்கள் மீதான பாகா நகரில் (ஹைதராபாத்) நிஜாமின் அட்டூழியங்களுக்கு எதிராக, ஹிந்து மகாசபா, ஆர்ய சமாஜ் ஆதரவில், ‘பாகாநகர் நிஸ்சஸ்திர பிரதிகார் மண்டல்’ என்ற பதாகையின் கீழ் சத்யாகிரகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்க விரும்பும் சங்க அன்பர்கள் தனி நபராக பங்கேற்க வேண்டும் என்று ஹெட்கேவார் தெளிவாக கூறியிருந்தார்.
பாகா நகர் சத்தியாகிரகத்தில் ‘சங்கம்’ பங்கேற்றதாக சத்யா
கிரக அமைப்பாளர்கள் பாராட்டு சான்றிதழில் குறிப்பிட்டார்கள். சங்கத்தின் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று ஹெட்கேவார் கடிதம் எழுதினார். நித்திய சங்கப் பணி சத்யாகிரக நேரத்தில் கூட தடையின்றி நடைபெற வேண்டும் என்ற பார்வை கொண்டிருந்தார் டாக்டர்ஜி. அதனால் தான் காட்டு சத்யாகிரகத்தின் போதும், சர்சங்கசாலக் பொறுப்பை டாக்டர் பராஞ்சபேவிடம் ஒப்படைத்து, தனிப்பட்ட முறையில் அவர் பல தன்னார்வலர்களுடன் சத்யாகிரகத்தில் பங்கேற்றார்.
1942 ஆகஸ்ட் 8 அன்று, மும்பையில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில், காங்கிரஸ் மாநாட்டில், மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தை அறிவித்தார். இரண்டாவது நாளிலிருந்தே, நாட்டில் இயக்கம் வேகம் பெற்றது. இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
விதர்பாவில், பாவோலி (அமராவதி), அஷ்டி (வார்தா) மற்றும் சிமூர் (சந்திரபூர்) ஆகிய இடங்களில் சிறப்பு இயக்கங்கள் நடந்தன. பெர்லின் வானொலியிலும் சிமூர்செய்தி ஒலிபரப்பானது. காங்கிரஸின் உத்தவ்ராவ் கோரேகர், சங்க பொறுப்பாளர்கள் தாதா நாயக், பாபுராவ் பேக்டே, அண்ணாஜி சிராஸ் ஆகியோரால் இங்கு இயக்கம் நடத்தப்பட்டது. இதில், ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானவர் பாலாஜி ராய்புர்கர் என்ற சங்க ஸ்வயம்சேவகர் மட்டுமே. காங்கிரஸின் ஸ்ரீ துக்கடோஜி மகாராஜால் நிறுவப்பட்ட ஸ்ரீ குருதேவ் சேவா மண்டலுடன் இணைந்து சங்கத் தொண்டர்கள் 1943ல் சிமூர் இயக்கத்தையும் சத்யாகிரகத்தையும் ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டத்தில் 125 சத்யாக்கிரகிகள் மீது வழக்கு தொடரப்பட்டது; எண்ணற்ற தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் நடந்த இந்த இயக்கத்தில், மூத்த சங்கப் பொறுப்பாளர்கள், பிரச்சாரகர்கள் தங்கள் சொந்த உந்துதலால் இணைந்தனர். அத்தகைய சில சங்க ஊழியர்களின் பெயர்கள் பின்வருமாறு; – ராஜஸ்தானில் பிரச்சாரக் ஜெய்தேவ்ஜி பாடக் (இவர் பின்னர் வித்யா பாரதியில் செயல்பட்டார். ஆர்வியில் (விதர்பா) டாக்டர் அண்ணாசாகேப் தேஷ்பாண்டே; ஜஷ்பூரில் (சத்தீஸ்கர்) ரமாகாந்த் கேசவ் (பாளாசாகப்) தேஷ்பாண்டே (இவர் பின்னர் வனவாசி கல்யாண் ஆசிரமத்தை நிறுவினார்) உள்ளிட்ட பலர்.
டெல்லியில், வசந்தராவ் ஓக் (பின்னர் டெல்லியின் பிராந்த் பிரசாரக் ஆனவர்). பீகாரில் (பாட்னா) பிரபல வழக்கறிஞர் கிருஷ்ண வல்லப் பிரசாத் நாராயண் சிங் பபுவாஜி (பின்னர் பீகாரின் சங்கசாலக் ஆனவர்); டெல்லியில் சந்திரகாந்த் பாரத்வாஜ் (காலில் தோட்டா பாய்ந்தது. அதை அகற்ற முடியவில்லை. பின்னர் அவர் புகழ்பெற்ற கவிஞராகவும் பல சங்கப் பாடல்களை இயற்றியவராகவும் ஆனார்). கிழக்கு உத்தரப் பிரதேசத்தில், பின்னர் பிராந்த பிரசாரக் ஆன மாதவ்ராவ் தேவட்; உஜ்ஜயினில் (மத்திய பிரதேசம்) தத்தாத்ரேய கங்காதர் (பையாஜி) கஸ்தூரேயின் பங்களிப்பு குறிப்
பிடத் தக்கது (அவர் பின்னர் சங்கப் பிரச்சாரக் ஆனார்).
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை மீறி சத்யா
கிரகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபுறம் பல போராட்டக்காரர்கள் தலைமறைவாக இருந்து இயக்கத்திற்கு வேகத்தையும் திசையையும் கொடுக்க உழைத்தனர். அத்தகைய நேரத்தில், தலைமறைவு தலைவர்களுக்கு வீடுகளில் அடைக்கலம் கொடுப்பது ஆபத்து. 1942 இயக்கத்தின் போது, தலைமறைவு கிளர்ச்சியாளர் அருணா ஆசஃப் அலி டெல்லியின் மாகாண சங்கசாலக் லாலா ஹன்ஸ்ராஜ் குப்தாவின் வீட்டில் வசித்து வந்தார். மகாராஷ்டிராவின் சாதாராவின் தீவிர போராட்டக்காரர் நானா பாட்டீலுக்கு அவுந்த் சங்கசாலக் பண்டிட் சாத்வலேக்கர் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். இப்படி இன்னும் பல பெயர்கள் இருக்கலாம். அந்த நேரத்தில், இவற்றையெல்லாம் ஆவணப்படுத்துவது கற்பனை கூட செய்ய முடியாத விஷயம்.
டாக்டர் ஹெட்கேவாரின் வாழ்க்கையைப் படிக்கும்
போது, அவரது குழந்தைப் பருவம் முதல் இறுதி மூச்சு வரை, அவரது வாழ்க்கை நாட்டிற்காகவும், அதன் சுதந்திரத்திற்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டது என்பது புரிகிறது. பிழையற்ற, நல்லொழுக்கமுள்ள, தேசியவாதக் கருத்துக்களால் சமுதாயத்தை எழுப்பி ஒழுங்கமைக்கும் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். 1947 வரையிலான சங்கத்தின் உறுதிமொழியில் கூட சங்கப் பணியின் நோக்கம் ‘ஹிந்து ராஷ்டிரத்தை சுதந்திரமாக்குவது’தான்.
1921ல் லோக்நாயக் அணே தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண காங்கிரஸின் மாகாணக் கூட்டத்தில், புரட்சியாளர்களைக் கண்டிக்கும் தீர்மானம் வரவிருந்தது. புரட்சியாளர்களின் பாதையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களின் தேசபக்தியை சந்தேகிக்கக்கூடாது என்று டாக்டர் ஹெட்கேவார் அவர்களுக்கு விளக்கினார். தனிநபர் அல்லது குறிப்பிட்ட பாதையை விட மிக முக்கியமானது சுதந்திரத்தை அடைவது என்ற லட்சியம் என்பதில் டாக்டர்ஜி தெளிவாக இருந்தார்.
அரசியல் பார்வை மட்டும் கொண்ட ஒரு பிரிவினர், ‘மற்றவர்கள் சுதந்திரம் பெற எதுவும் செய்யவில்லை, முழு முயற்சியின் பெருமையும் நமக்கே’ என பிரச்சாரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது சரியல்ல. ஆயுதப் புரட்சியில் இருந்து அகிம்சை சத்தியாகிரகம் வரை, ராணுவத்தில் கிளர்ச்சி, நேதாஜியின் இந்திய சுதந்திர படையின் முயற்சிகள் என அனைத்தும்தான் சுதந்திரத்தை அடைவதற்கு வழிவகுத்தன.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்திஜியின் கடைசி சத்தியாகிரகம். அதன் பிறகு நாடு 1947ல் சுதந்திரமடைந்தது. இது உண்மைதான். ஆனால் காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால்தான் சுதந்திரம் கிடைத்தது என்று கூறி, அந்த இயக்கத்தில் சிறை சென்றவர்களின் முயற்சியால்தான் தேசம் சுதந்திரம் பெற்றோம் என்று கூறுவது கேலிக்கூத்தானது, அநியாயம், உண்மைக்குப் புறம்பானது.
அதே சமயம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சுதந்திரம் அடைவதற்கு ஒன்றும் செய்யவில்லை என்று நினைப்பதும், சிறை செல்வது மட்டும் தேசபக்தியின் அடையாளம் என்று நம்புவதும் சரியல்ல. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர்கள், தலைமறைவு போராட்டக்காரர்கள், அவர்களுக்கு தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்தவர்கள், தேசபக்தியை விதைத்தவர்கள். ஆங்கிலேயர்களுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்திய சுதேச தொழில் மூலமும், நாட்டுப்புறக் கலை, பத்திரிகை, கதை, நாவல், நாடகம் போன்றவற்றின் மூலமும் தேசத்தை எழுப்பிய அனைவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
பாரதம் ஒரு அரசியல் அமைப்பு மட்டுமல்ல. இது ஆயிரக்
கணக்கான ஆண்டுகால ஒருங்கிணைந்த வாழ்க்கைப் பார்வையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சார அமைப்பு. எனவே, பாரத வரலாற்றில் வெற்றிகரமான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம், ஒரு கலாச்சார விழிப்புணர்வு காணப்படுகிறது. அதனால் தான் முகலாயர்களின் ஆட்சியில் பக்தி இயக்கம் 12ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை பாரதம் முழுவதும் ஒரே நேரத்தில் வெடித்து வடக்கே சுவாமி ராமானந்த் முதல் தெற்கே ராமானுஜர் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் சாதுக்கள், துறவிகள், சன்யாசிகள் போன்ற ஆன்மீகப் பெரியோரின் பாரம்பரியம் தொடங்கியது. ஆங்கிலேயர்கள் வந்து அடிமைப்படுத்தும் போதே தேசத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகத் தலைமைப் பாரம்
பரியம் தொடங்கிவிட்டது. பண்பாட்டு விழிப்புணர்வின்றி பாரதத்தின் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் வெற்றிகரமாகவும் நிரந்தரமாகவும் இல்லை. எனவே, பண்பாட்டு விழிப்புணர்வுப் பணியை அரசியலின் அளவுகோல் வைத்து மதிப்பிடக் கூடாது. பாரதம் போன்ற ஒரு நாட்டிற்கு ஆன்மீக, கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி முக்கியம், அது அமைதியாகவும் நீடித்தும் நடைபெறுவது மிகவும் முக்கியம்.