ஐ.நா. வல்லுநர்கள் திபெத் மற்றும் பிற பிராந்தியங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை அடக்கும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐ.நா.வின் 50 வல்லுநர்களும், 30 சிறப்பு வல்லுனர்களும் அடங்கிய குழு ஒன்று ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இதற்கான அழைப்பை விடுத்துள்ளனர். இக்குழு வல்லுநர்கள் ஹாங்காங்கில் ஜனநாயக வாதத்தை அடக்குவது, திபெத் விவகாரம் சின்ஜியாங்கில் மக்கள் குறிப்பாக மத மற்றும் இன சிறுபான்மையினர் மீதான கூட்டு அடக்குமுறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவலை முதலில் வெளியிட்ட டாக்டர் லி வென்லியாங் போன்றவர்களை அடக்குவது, வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோர் தொற்றுநோய் தொடர்பாக ஆன்லைனில் சுதந்திரமாக பேசுவதற்கான உரிமையைப் பறிப்பது, அதிகாரிகளை கொண்டு பழிவாங்குவது போன்ற சீன நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த குழுவின் ஆய்வு வருகைகளை சீனா பலமுறை மறுத்துவிட்டதுடன் வுஹானில் கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து விசாரிக்க வந்த அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து குழுவையும் சீனா தடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.