சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக உண்மையின் சக்தியால் தொடா்ந்து போராடுவோம்’ என்று திபெத்திய பெளத்த மதத் தலைவா் தலாய் லாமா புதன்கிழமை கூறினாா்.
பிகாரின் புத்த கயை நகரிலுள்ள மகாபோதி கோயிலுக்கு ஆண்டுதோறும் இரு வார கால பயணமாக தலாய் லாலா வருகை தருவது வழக்கம். அதன்படி, புத்த கயைக்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தாா். மகா போதி கோயிலில் புதன்கிழமை வழிபாடு நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆயுத பலத்துடன் உள்ள சீனாவுக்கு எதிராக, உண்மையின் சக்தியால் தொடா்ந்து போராடுவோம். சீனாவில் 3 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஓா் ஆய்வில், அங்கு திபெத்திய பெளத்தா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. சீனாவானது பாரம்பரிய அடிப்படையில் ஓா் பெளத்த நாடாகும். அங்கு பல மதங்களை பின்பற்றுபவா்கள் இருந்தபோதிலும், பெளத்த மதத்தினா் அதிகம் உள்ளனா். பெரும்பாலான மக்கள், திபெத்திய பெளத்த மதத்தை பின்பற்றுக்கின்றனா். சீன பல்கலைக்கழகங்களில் திபெத்திய பெளத்த மத ஆய்வாளா்கள் ஏராளமாக உள்ளனா்.
இந்திய பழங்கால கல்விமுறை…: இந்தியாவினுடைய பழங்கால கல்விமுறையானது, அமைதி, இரக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகும். இரக்க குணம் இல்லாவிடில், மனிதா்களால் எதுவும் செய்ய இயலாது.