அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான அறிக்கை. அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியாவின் ‘ரா’ உளவு அதிகாரி விக்ரம் யாதவுக்கு தொடர்பு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கு அப்போதைய இந்திய உளவு அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அமெரிக்க உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது.
இந்த நடவடிக்கை குறித்துஅறிந்த முன்னாள் இந்தியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, வெளிநாடுகளில் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர உளவுத் துறைதலைவர் சமந்த் கோயலுக்கு அதிக அழுத்தம் தரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீக்கிய பிரிவினைவாதிகளைக் கொல்லும் ‘ரா’ உளவு அமைப்பின் திட்டங்கள் குறித்து அறிந்திருக்கலாம் என்பது அமெரிக்க உளவு அமைப்புகளின் தற்காலிகமான மதிப்பீடாக உள்ளது. அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அரசின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க அரசு எழுப்பியுள்ளபாதுகாப்பு தொடர்பான கவலைகள் குறித்து இந்தியா ஏற்கெனவே தீர விசாரித்து வருகிறது. தீவிரமான இந்த விஷயத்தில் வாஷிங்டன் போஸ்ட் கேள்விக்குரிய அறிக்கையை வெளியிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உயர்மட்ட குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதைப்பற்றிய ஊகமான, பொறுப்பற்ற கருத்துகள் எந்த பயனையும் தராது’’ என்று தெரிவித்துள்ளார்.