சி.பி.ஐ விசாரிக்கும் சாதுக்கள் படுகொலை வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் இரண்டு சாதுக்களும் அவர்களது வாகன ஓட்டுநரும் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முந்தைய சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) அரசு, இவ்வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது. வழக்கை நீர்த்துப்போக வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கையை எதிர்த்தது. இந்த சூழலில், தற்போதுள்ள சிவசேனா, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு, பால்கர் படுகொலை வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் (சி.பி.ஐ) ஒப்படைக்க பரிந்துரை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசின் புதிய பிரமாணப் பத்திரத்தை கவனத்தில் கொண்டு, இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, “மாநில அரசு எடுத்த முடிவைக் கருத்தில் கொண்டு, இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது புதிய வழிகாட்டுதல்கள் தேவையில்லை. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.