நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த சரக்குகளை சோதனையிட்டதில், நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை கண்டுபிடித்தனர். ஏற்றுமதி ஆவணக் குறிப்பில் கும்பகோணத்தில் உள்ள கலை, கைவினைப் பொருள் நிலையத்தில் இதனை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனல், தொல்பொருள் துறையிடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் அதில் இணைக்கப்படவில்லை. சிலையை சோதனையிட்டதில் இந்தச் சிலை 1800ம் ஆண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சிலை என தொல்லியல் துறை சந்தேகிக்கிறது. 36 சென்டி மீட்டர் உயரமுள்ள இந்த வெண்கல சிலை 4.56 கிலோ எடை கொண்டது. இந்தச் சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த கெடிலம் என்ற ஊரை சேர்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிலை மற்றும் இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.