சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

தாயே! பாரத மாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்” என்கிறார் பங்கிம் சந்திரர். அவர் இயற்றிய பாடலில் இருந்துதான் ‘வந்தேமாதரம்’ என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது. ‘வந்தேமாதரம்’ என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதை சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார். சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்க முடியாத ஒருவர், ஒவ்வொரு அடி விழும்போதும் ‘வந்தேமாதரம்’ கோஷம் போடுவதால் அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக்கூடிய சக்தி வந்துவிடும்” என்பார்.

ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தில் ஈடு இணையற்ற புலமை உடையவர். அச்சுக்கோப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ம.பொ.சி. சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டவர். ‘கிராமிணி குலம்’, ‘தமிழ் முரசு’ போன்ற இதழ்களில் ம.பொ.சி. சுதந்திரப் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ம.பொ.சியே. சென்னையில் பொன்னுசாமி கிராமணியார் – சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 26.06.1906ம் மகனாகப் பிறந்தார். ம.பொ.சி. அவர்கள் சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார்.

தான் பெற்ற அனுபவத்தாலும், சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும், சிறந்த தலைவராகவும், தமிழறிஞராகவும் விளங்கினார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில், சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார். ம.பொ.சி அவர்கள் பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர் என்பதோடு மட்டுமல்லாது, சிறந்த நூலாசிரியருமாகவும் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அவர் எழுதியுள்ள நூல்களில், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழன் குரல், வீரக் கண்ணகி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.