சிலப்பதிகாரத்தில் சாதித்த அரசு பள்ளி மாணவிகள்..!!!

தமிழ் மொழியின் துணை ஊற்றாக விளங்குகிற சங்க இலக்கியத்தில் “சிலப்பதிகாரம் மக்கள் காப்பியமாக போற்றப்படுகிறது. இது இரண்டாம் நூற்றாண்டில் சீத்தலைத் சாத்தனார் வேண்டுக்கோளின்படி இளங்கோவடிகளால்” இயற்றப்பட்டது.

கண்ணகியின் கால் சிலம்பால் விளைந்த கதையிது. சிலம்பு, அதிகாரம் எனும் இருசொற்களின் கம்பீரத்தில்  “சிலப்பதிகாரம்” எனும் பெயர் பெற்றிருக்கிறது.

தமிழிலுள்ள கூட்டு சுவையால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழைத் தன்னகத்தே கொண்டு ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக மங்காப் புகழோடு மனக்கிறது சிலப்பதிகாரம்.

அறமே உயிராக கொண்டு வாழ்ந்த கண்ணகி, கோவலன், மாதவி கதையின் மாந்தர்களை கையைப்பிடித்து கொண்டு படிக்க படிக்க திகட்டாமல் 3 காண்டம், 30 காதைகள், 5,270 அடிகளில் காதலும், அனலும் சொற்களில் வழிந்தோட, நீதியும், அறமும் வாரி வழங்கிய பாரதத்தின் முதல் தேசிய காப்பியம் “..சிலப்பதிகாரம்..” என்பது குறிப்பிடத்தக்கது..!

“திருக்குறளை மாணவர்கள் முற்றோதல் செய்கிறார்கள். அதேபோல திருவாசகத்தையும் பாராயணம் செய்கிறார்கள். ஆனால் “சிலப்பதிகாரத்தையும்” மாணவர்கள் மனனம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக சாத்தூர் நா. சுப்பையாபுரம் அரசு பள்ளியில் “..தமிழாசிரியராக பணியாற்றும் ராஜசேகர்..” உள்ளார்.

இப்பள்ளியில் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஆய்வு செய்தார் ராஜசேகர். வீரசெல்வியையும் வேணியையும் தேர்வு செய்து தொடர்ந்து அவர்களை மனனம் செய்ய ஊக்கப்படுத்தினார். அவ்வபோது பரிசுப் பொருட்கள் வழங்கியும் உத்வேகப்படுத்தியதால் “..சிலப்பதிகாரம் முழுவதையும் (மனனம்) முற்றோதல்..” செய்ய வைத்து நாடறியச்  செய்திருக்கிறார் ஆசிரியர்  ராஜசேகர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் இரண்டு மாணவிகளும் தண்ணீர் கூட அருந்தாமல் 4 மணி, 6 நிமிடம் முழுமையாக சிலப்பதிகாரம் முற்றோதல் செய்த நிகழ்வு “..ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு..” சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

தமிழாசிரியர் ராஜசேகர்..,

“..எங்கள் பள்ளியில் படிக்கும் வீரசெல்வி, வேணி இரண்டு பேருமே கடந்த 3 வருடங்களாக தொடர் பயிற்சியாலும், முயற்சியாலும் இந்த சாதனையை எட்டியுள்ளனர்.

சிலப்பதிகாரம் இத்தகைய பெருங்காப்பியத்தை பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை என நேரம் காலம் பார்க்காமல் தனது பள்ளிப்பாடங்களுடன் சேர்த்து கூடுதலாக படித்து வந்தனர்.

மூன்று வயதினிலேயே தந்தையை இழந்த மாணவி வீரசெல்வியின் அம்மா முனீஸ்வரி பட்டாசு தொழிற்சாலையில் கூலி வேலை பார்க்கிறார். மற்றொரு மாணவி வேணியின் தந்தையார் சந்தானம், தாய் பாண்டிய லட்சுமி இருவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இந்த கஷ்டத்தை புரிந்து கொண்டு மாணவிகள் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மாணவிகளுக்கு அவ்வபோது பரிசு கொடுத்தும், பாராட்டு வார்த்தைகளாலும் ஊக்கப்படுத்துவேன். தமிழ்மொழி மீது கொண்ட பற்று, ஆர்வத்தினாலும் இம்மாபெரும் சாதனையை  முதன்முதலாக  நிகழ்த்தியுள்ளார்கள்…”

இது குறித்து மா.வீரசெல்வி கூறுகையில் :

“நான் சிலப்பதிகாரம் முழுமையாக முற்றோதல் செய்ததற்கு  ஊன்றுகோலாக இருந்தது எங்கள் தமிழாசிரியர் ஐயா தான்  என்பதை தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளேன்.

நாங்கள் 15வது காதை படிக்கும் போது மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னார் அதேபோல் அழைத்தும் சென்றார் எங்கள் ஐயா.

தமிழய்யாவும் அவர்களுடைய மனைவி ஜான்சிராணி ஆசிரியையும் எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக தங்க கம்மல் வாங்கித் தருகிறேன் என்று சொன்னாங்க; சொன்னபடியே வாங்கியும் கொடுத்தார்கள்.

இப்படி எங்களை அவ்வபோது ஊக்கப்படுத்தி கற்றுத்தந்தார்கள். அதனால் தான் என்னால் சிலப்பதிகாரத்தை முழுமையாக முற்றோதல் செய்ய முடிந்தது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”  என்றார் வீரசெல்வி.

மாணவி ச.வேணி கூறுகையில் :

“ஒருமுறை சிலப்பதிகாரத்தில் இருபது காதையை உணர்ச்சிப்பூர்வமாக சொன்னார் எங்கள் தமிழ் ஐயா. அதற்கு பிறகு தான் எனக்கும் சிலப்பதிகாரம் படிக்க ஆர்வம் வந்தது. சிலப்பதிகாரப் புத்தகத்தை பார்த்தவுடன் என் மனதில் படிக்க முடியும் என்று நம்பிக்கைத் தோன்றியது.

மூன்று வருட காலமாக தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களில் ஐயா வகுப்புக்கு வந்து சொல்லித் தந்தார். சாதாரண மாணவியான என்னை சாதனை மாணவியாக மாற்றியதற்கு தமிழாசிரியர் ராஜசேகர் ஐயா தான் முழுகாரணம் இதை என்  வாழ்நாளில்  மறக்கமுடியாது”  என்றார்  வேணி.

கல்வியுடன் சேர்த்து தமிழ் இலக்கியத்தையும் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மாணவிகள் வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள்.